Published : 12 Jul 2023 04:00 AM
Last Updated : 12 Jul 2023 04:00 AM

கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும்: திருப்பூர் சுப்பிரமணியம்

திருப்பூர் சுப்பிரமணியம் | கோப்புப் படம்

திருப்பூர்: திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை.

தற்போது உள்ள டிக்கெட் கட்டணமே போதுமானது. சிறிய கிராமங்களில் மட்டும் டிக்கெட் ரூ.100, ரூ.120 என விற்பனை செய்யப்படுகிறது. இதனை ரூ.120, ரூ.150 என மாற்றி தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தற்போது அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

ஒரே மாதிரியான மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், கிராமங்களில் உள்ள திரையரங்குகளுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டுமே தவிர, தற்போதுள்ள கட்டணமே போதும். மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும். ஏற்கெனவே ஓ.டி.டி. காரணமாக 40 சதவீத ரசிகர்களின் வருகை குறைந்துள்ளது.

மேலும் தமிழக அரசு மாநகராட்சி வரியை ரத்து செய்ய வேண்டும். இதை ரத்து செய்யும் பட்சத்தில் டிக்கெட் கட்டணத்தில் ரூ.20 குறையும். இதுபோல் மின் கட்டண உயர்வுக்கு ஏற்றவாறு, 5 வருடங்களாக உயர்த்தப்படாமல் உள்ள பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x