

இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்துக்காக, ஏ.ஆர். ரகுமான் இசையில், இளம் இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்தின் வேலைகள், இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விக்ரம், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வரும் 'ஐ' படத்தில், கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் வேலை செய்கின்றனர். மேலும் ஒப்பனையும் படத்தின் சிறப்பம்சமாக இருக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலை, வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதனை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமானோடு எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பதிவேற்றி, அவர் தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் ஷங்கரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும், ஷங்கர் இதைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மரியான் திரைப்படத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலைப் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.