8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: திரையரங்குகளில் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகுதான் புதிய திரைப்படங்களை ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர், திரையரங்க அதிபரும், சங்கத்தின் பொதுச் செயலாளருமான ரோகிணி பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: "ஓடிடியில் 4 வாரங்களில் புதிய திரைப்படங்களைத் திரையிடுவதாலும், அதற்கான விளம்பரங்கள் ஒரு வார காலம் கொடுக்கப்படுவதாலும், திரையரங்குகளுக்கு வரும் கூட்டம் குறைவதாக சங்க நிர்வாகிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, வரும் காலங்களில் 8 வாரங்களுக்குப் பிறகுதான், ஓடிடிக்கு புதிய திரைப்படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். அதற்கான விளம்பரங்களை 4 வாரங்களுக்குப் பிறகுதான் வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறோம்.

இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் கலந்து ஆலோசித்து ஒரு முடிவெடுப்போம். அதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூடி ஆலோசிப்போம். ஓடிடியில் வெளியிடப்படும் திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியிடப்படுவதால்தான், அதற்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, ஓடிடி மூலம் அத்திரைப்படங்களுக்கு வரும் தொகையில், 10 சதவீத ராயல்டி தொகையை திரையரங்கு உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

அதேபோல், அரசாங்கத்திடம் திரையரங்கு கட்டணத்தை உயர்த்துமாறு கோரியுள்ளோம். இது தொடர்பாக அரசிடம் மீண்டும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளோம். திரையரங்குகளில் வெறுமனே திரைப்படங்களை மட்டும் வெளியிடுவதால், எங்களுக்கு சிரமமாக உள்ளது.

முக்கியமாக நாங்கள் வைக்கும் கோரிக்கை, பிரபல இயக்குநர்கள், பெரிய நட்சத்திரங்களை வைத்து மட்டும் வருடத்துக்கு ஒரு படம் எடுக்காமல், புதுமுக நடிகர்களை வைத்து வருடத்துக்கு நான்கைந்து படங்கள் கொடுத்தால், திரையரங்குகள் செழிப்பாக இருக்கும். பெரிய நடிகர்களை வைத்து படம் எடுப்பதால், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்கள்தான் வருகிறது. இதுதொடர்பாக இயக்குநர் சங்கத்திடம் நாங்கள் பேச இருக்கிறோம்.

அதேபோல், ஐபிஎல் போட்டிகளை நிறைய பேர் பெரிய திரையில் காண தயாராக உள்ளனர். அதனால், ஐபிஎல் போட்டிகளை ஒளிப்பரப்புவோம். அதேபோல், உலக கோப்பை கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்றவைகளை ஒளிபரப்ப எங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார். முன்னதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்:

  • புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் திரையிட வேண்டும்.
  • ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழித்த பிறகுதான் விளம்பரம் செய்ய வேண்டும்.
  • விளம்பர போஸ்டர்களுக்கு 1% (பப்ளிசிட்டி வரி) நீக்க வேண்டும்.
  • புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60%தான் பங்குத் தொகையாக கேட்க வேண்டும்.
  • திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில்வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்குகளுக்கு அளிக்க வேண்டும்.

அரசிடம் கேட்டுள்ள கோரிக்கைகள்:

  • திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.
  • திரையரங்குகள் வர்த்தக சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • மின்சாரக் கட்டணங்கள், சொத்து வரி, ஆகியவைகள் திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவண செய்ய வேண்டும்.
  • ஏற்கெனவே நாம் கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறுபரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in