“ஜாலியான ரொமான்டிக் காமெடி படங்கள் எடுப்பது எனக்கு போரடிக்கும்” - மிஷ்கின்

“ஜாலியான ரொமான்டிக் காமெடி படங்கள் எடுப்பது எனக்கு போரடிக்கும்” - மிஷ்கின்
Updated on
1 min read

சென்னை: “என்னிடம் ஜாலியான ரொமான்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போரடிக்கும்” என்று இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கூறினார்.

பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகைகள் ரித்திகா சிங், மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், “கொலை படத்தின் ட்ரெய்லர் அருமையாக இருந்தது. சினிமா என்பது கூத்து என்ற கலையில் இருந்துதான் வந்தது. சினிமா எனும் கலையை புரிந்து இயங்குபவர்கள் இங்கு குறைவு. என்னைப் பார்ப்பவர்களே அடுத்து என்ன சார் கொலை படமா என்று கேட்பார்கள். அப்படி என் படங்களை சுருக்கி விட்டார்கள்.

‘கொலை’ என்ற இந்தப் படத்தின் டைட்டில் எழுத்துக்காக (Font) இயக்குநர் அவ்வளவு மெனக்கெட்டுள்ளார். ஒரு நல்ல இயக்குநர் படத்தலைப்பின் ஃபாண்ட் மூலமாக பார்வையாளர்களுக்கு கதை சொல்ல முடியுமா என்று யோசிப்பான். ஒரு மனிதன் ஏன் கொலை செய்கிறான்? உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு இருக்கும் ஒருவனின் வலியை நாம் எப்படி புரிந்து கொள்வோம்? அப்படி ஓர் இடத்துக்கு ஒரு மனிதன் உந்தப்படுவான் என்றால் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளான் என்று அர்த்தம். மகாபாரதம், ராமாயணம் என இதிகாசங்களில் கொலை பற்றி சொல்லப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் நாவல்களில் நான்கு கொலை பற்றிதான் சொல்கிறது. அது ஏன் என்று யோசிப்பவர்களால்தான் இதுபோன்ற படங்களை உருவாக்க முடியும்.

அந்த வகையில், இயக்குநர் பாலாஜிக்கு நன்றி. தொடர்ந்து அவர் கொலை படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். என்னிடம் ஜாலியான ரொமான்டிக் காமெடி படங்கள் எடுக்க மாட்டீர்களா எனக் கேட்கிறார்கள். அப்படி செய்வதற்கு நான் தற்கொலை செய்து கொள்வேன். அது எனக்கு போரடிக்கும். ஒவ்வொரு கொலை படத்திலும் ஒரு கொலைகாரனுக்குப் பின்னால் ஒரு மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமல் இறுக்கமாக உள்ளது. அதை விசாரித்து இயக்குநர் ஒரு சிறந்த படமாக தரும்போது அது வெற்றிப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in