

சீனு ராமசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இந்தப் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப் போவதாக தகவல் வெளிவந்தது. இளையராஜா இசையில் ‘நிழல்கள்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக திரையுலகில் அறிமுகமானார் வைரமுத்து. தொடர்ந்து இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றினர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் பாடலின் மூலம் 28 ஆண்டுகளாக பிரிந்திருந்த இளையராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் இணைகிறார்கள் என்று தகவல் பரவியது.
ஆனால், ‘இது முற்றிலும் தவறான செய்தி. இதுபற்றி எதுவும் பேச விரும்பவில்லை’ என்று இளையராஜா தரப்பில் கூறப்பட்டது.
‘இன்னும் படத்துக்கான பாடல் உருவாக்கும் பணி முழுமையாக முடியவில்லை. தற்போது அந்த வேலைகளில்தான் இருக்கிறோம். இந்தப் படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜாவிடம் பாடும்படி படக் குழுவினர் யாரும் கேட்கவில்லை’ என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி தரப்பில் கூறப்படுகிறது.