

சென்னை: ‘ட்ரிப்’ இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், இப்போது இயக்கியுள்ள படம், ‘தூக்குதுரை’. யோகிபாபு நாயகனாக நடிக்கும் இதில் இனியா, ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்ட்ராயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உட்பட பல நடிக்கின்றனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறும்போது, “3 விதமான காலங்களில் கதை நடக்கிறது. 18-ம்நூற்றாண்டு கால கதையை அனிமேஷனில் சொல்கிறோம். 1999 மற்றும் தற்போதைய காலகட்டங்களில் கதை நடக்கிறது. அரசப்பரம்பரை குடும்பம் ஒன்றின் பேச்சுக்கு கட்டுப்பட்டு ஓர் ஊர் இருக்கிறது. அவர்கள் தலைமையில் கோயில் திருவிழா நடக்கிறது. கோயிலில் இருக்கும் பழங்கால கிரீடம் ஒன்றைத் திருட கும்பல் செல்கிறது. அவர்கள் என்ன பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. திருப்பத்தூர் பின்னணியில் கதை உருவாகி இருக்கிறது. காமெடி பிளஸ் த்ரில்லர் கதையாக இது இருக்கும். யோகிபாபு, இனியா இருவரும் 2 கெட்டப்புகளில் வருவார்கள். படத்துக்காக, குகை செட் ஒன்று அமைத்தோம். அது வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு டென்னிஸ் மஞ்சுநாத் கூறினார்.