

நேர்மையையும், பேராசையையும் எதிரெதிர் துருவங்களாக நிறுத்தி சிக்கலான மனித உணர்வுகளின் வழியே அதிர்ஷ்டத்தால் கிடைத்த பணத்தை அணுகும் படைப்பே ‘பம்பர்’.
சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த புலிப்பாண்டி (வெற்றி). பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என நினைக்கும் அவரை காவல் துறை கைது செய்ய தீர்மானிக்கிறது. அதிலிருந்து தப்பிக்க மாலைபோட்டு சபரிமலைக்கு செல்கிறார். அங்கு லாட்டரி சீட்டு விற்கும் இஸ்மாயிலை (ஹரீஷ் பெரேடி) சந்தித்து அவரிடம் லாட்டரி ஒன்றையும் வாங்கி, அதை அங்கேயே தொலைத்துவிடுகிறார். ஆனால், அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசுத்தொகை விழுகிறது. அதை எடுத்து வைத்திருந்த இஸ்மாயில் தனது குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி புலிப்பாண்டியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி செல்கிறார். இறுதியில் அவர் புலிப்பாண்டியை கண்டறிந்து லாட்டரி சீட்டை கொடுத்தாரா? இல்லையா? அதன் பின் என்ன நடந்தது? - இதுதான் திரைக்கதை.
யூனிவர்ஸல் பிரச்சினையான பணத்தை மையமாக வைத்து இருவேறு மனித உணர்வுகள் கொண்டவர்களை எதிரெதிர் திசையில் நிறுத்தி அறத்தின் வழியே நடப்பவரின் கரடுமுரடான பாதையை வெளிச்சமிட்டுக்காட்டியிருக்கிறார் இயக்குநர் செல்வகுமார். பேராசைக்கும், நேர்மைக்குமான தராசில் ஆடும் மனித மன ஓட்டங்கள் சுவாரஸ்யம். இந்த இரண்டுக்கும் இடையிலான புள்ளியை நம்மால் எளிதில் கனெக்ட் செய்து கொள்ள முடிவது படத்தின் பலம். தமிழ் சினிமாவின் ஓர் அழுத்தமான, நேர்மையான ஒரு முஸ்லிம் கதாபாத்திரமாக ஹரீஷ் பெரடி. வீடே அடமானம் வைக்கும் சூழலுக்கு வந்தாலும் கூட அடுத்தவரின் பணத்துக்கு ஆசைப்படாத கண்ணியமான மனிதர்.
வயதுக்கு ஏற்ற பொறுமை, நிதானம், சொற்களில் முதிர்ச்சி என தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை செம்மையுறச் செய்கிறார். பணத்தை வாசற்படியில் வைத்துவிட்டு செருப்பை கழட்டி அவர் வீட்டுக்குள் அவர் நுழையும் காட்சி கவித்தும். இப்படியான இரண்டு மூன்று காட்சிகள் படத்தின் ப்ரேம் வழி கதை சொல்கிறது. நாயகன் வெற்றி தன்னால் முடிந்த அளவுக்கு நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால், முகத்தில் உணர்ச்சிகளுக்கான வறட்சி இல்லாமலில்லை. ஷிவானிக்கு கதையில் பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும் நடிப்பில் குறைவைக்கவில்லை. ஜிபி முத்து அப்பாவித்தனமான நடிப்பில் கவனம் பெறுகிறார். தங்கதுரை, கவிதா பாரதி, ஆதிரை, அருவி மதன் உள்ளிட்டோர் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
‘நல்லவனா வாழ்றோமா, கெட்டவனா வாழ்றோமாங்குறது முக்கியமில்ல பணத்தோட வாழணும்’ போன்ற வசனம் யதார்தத்தால் அறைகிறது. ‘பாடை ஏறி போகும்போதும் பணத்தாசை போகாதே’ போன்ற கார்த்திக் நேதாவின் பாடல் வரிகளும் கதையை சுற்றியே எழுதப்பட்டிருப்பது ஈர்ப்பு.
லாட்டரி சீட்டில் பரிசு விழுந்ததும் உறவினர்கள், நண்பர்கள், விட்டுச் சென்றவர்கள் என சுற்றியிருப்பவர்களின் ரியாக்ஷன்களும், அதற்கான காட்சிகளும் சுவாரஸ்யம். க்ளைமாக்ஸ் சேஸிங் காட்சிகள் விறுவிறுப்பை கூட்டுகின்றன. விவரம் தெரியாத ஒருவரை தேடிச்செல்லும் ஹரீஷ் பெரடியின் பயணம், பணத்துக்காக தந்தையை கொல்ல துடிக்கும் மகன், பணத்துக்காக நண்பனை கொல்ல திட்டமிடும் நண்பர்கள், இறுதிக் காட்சியில் கரையும் உள்ளங்கள் என மனித மனவோட்டங்கள் திரைக்கதையில் பிரதிபலிப்பது என்கேஜிங். ஆனால், இதெல்லாம் இரண்டாம் பாதியில்தான்.
படத்தின் நோக்கத்திலிருந்து விலகியிருக்கும் முதல் பாதி முழுவதும் புலிப்பாண்டி (வெற்றி) கதாபாத்திரத்தின் வாழ்க்கைச் சூழலை காட்டுகிறேன் என்ற பேரில் நிறைய நேரம் வீண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் பாதி ஒருபடமாகவும், இரண்டாம் பாதி ஒரு படமாகவும் விரிவது அயற்சி. சபரிமலைக்கு மாலை போட்டதும் வரும் காதலை இந்தப்படத்தில் தான் பார்க்க முடியும். க்ளைமாக்ஸிலிலும் சில பலவீனம் உண்டு.
வட்டார வழக்கை யதார்த்துக்கு நெருக்கமாக பேச முயற்சித்திருக்கிறார்கள். இருந்தாலும் டப்பிங் பிரச்சினை துருத்திகொண்டு நிற்கிறது. தேவையில்லாத காட்சிகளால் இழுத்துச் செல்லும் படம் கச்சிதம் கோரி கெஞ்சி நிற்பது பரிதாபம்.
தூத்துக்குடியையும், கேரள நிலத்தை இணைத்து தனது லென்ஸ் வழியே காட்சிமொழி கதை சொல்லிருக்கும் வினோத் ரத்தினசாமியின் பங்கு முக்கியமானது. கோவிந்த் வசந்தா வழக்கமான தனது வயலினுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்திருக்கிறார்.கார்த்திக் நேத்தாவின் வரிகள் அழுத்தமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதே முழுப் பாடல் வடிவம் பெறும்போது கோவிந்த் வசந்தாவின் வழக்கமான டச் மிஸ்ஸாவதாக தோன்கிறது. உதாரணமாக, ஹரிஷ் பெரடியின் பயணத்துக்கான பாடலில் கூடுதல் கவனம் செலுத்தாததால் பாடல் பாதியளவு எமோஷனதைதான் கடத்துகிறது. காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் கறார் காட்டியிருந்தால் முதல் பாதியில் மற்றொரு படத்தை பார்க்க வேண்டியிருந்திருக்காது.
மொத்தத்தில், சிக்கலான மனித உணர்வுகளை பணத்தின் வழியே யதார்த்தமாக அணுகிய வித்ததிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி அறத்தின் பாதையே மேலானது என்பதை சொன்ன விதத்திலும், நேர்மையை வலியுறுத்தும் வகையிலும் ‘பம்பர்’ பார்த்தவர்களுக்கு காசு வீணாகாத அதிர்ஷ்டம்தான்.