

விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயரித்து வருகிறது.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தியில் முன்னணி நடிகராக வலம் வரும் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.
'கத்தி' படத்தில் நடித்தது குறித்து நீல் நிதின் முகேஷ் கூறியிருப்பது, "நான் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். ‘கத்தி’ மற்றும் சல்மான் கான் நடித்து வரும் படத்திலும் நடித்து வருகிறேன். என்னுடைய புதிய தோற்றம் இரண்டு கதாப்பாத்திரங்களுக்கும் பொருத்தமானது. ’கத்தி’ திரைப்படத்திற்கு ’ஜானி காட்டர்(johnny gaddaar)’ போன்று வேடமிட்டிருக்கிறேன்.
‘கத்தி’ படத்திற்காக 10 அரை கிலோ குறைத்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு கட்டுக்கோப்பான உடலமைப்பு தான் பொருத்தமானது. இது எப்பொழுதும் தமிழ் சினிமாவில் தோன்றும் வில்லன் ரோல் கிடையாது. நான் ஒரு பணக்கார, வட இந்தியாவிலிருந்து வந்து தமிழ் பேசும் அயல்நாட்டு பட்டதாரியாக நடிக்கிறேன். ஒரு வில்லனாக நான் இந்த படத்தில் எப்போதும் போல சண்டை போடாமல், மதியால் எதிரியை வெல்வேன்.
இந்த சில குணாதிசியங்கள் தான் இந்த கதாப்பாத்திரத்தை சுவாரசியமாகவும் நடிப்பதற்கு கஷ்டமாகவும் இருந்தது. இது தான் என்னை இந்த படத்தின் பக்கம் ஈர்த்தது.
ஏ.ஆர். முருகதாஸ் என்ற பெயர் சொன்னதுமே இந்த படத்தில் நடிக்க கையெழுத்திட்டேன். ஒரு நல்ல இயக்குநருடைய படத்தில் நடிப்பது எல்லா நடிகர்களின் கனவு. தமிழ் சினிமாத்துறையில் புதிதாக கால் பதிக்கும் நான், முருகதாஸ் போன்ற இயக்குநருடன் படத்தில் பணி செய்தது என்னை சந்தோஷப்பட வைக்கிறது.
விஜய் எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் பெரிய நடிகர் என்ற கர்வத்துடன் நடந்ததில்லை. அவர் அனைவரிடமும் நட்போடுதான் பழகுவார். விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுடன் இந்த படத்தின் குழுவில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று கூறியிருக்கிறார்.