

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து காமெடியில் கலக்க இருக்கிறார் வடிவேலு. 'மெட்ராஸ்' படத்தைத் தொடர்ந்து 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்கி வரும் 'கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார்.
'கொம்பன்' படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கவிருக்கும் 'எண்ணி 7 நாள்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' இயக்குநர் கோகுல் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி.
நீண்ட நாட்களாக காமெடி வேடத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, நாயகனாக நடித்து வந்த வடிவேலுவை இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியனாக களமிறக்கத் திட்டமிட்டு இருக்கிறார் கோகுல். இதற்காக வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
வடிவேலு என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார், அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவில்லை. வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம்.