

சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில், தயாரிப்பாளர்களிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு படத்தை முடித்துக்கொடுக்காமல் இருக்கும் நடிகர்கள் மற்றும் முன் பணம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் இருக்கும் நடிகர்கள் மீது, நடிகர் சங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு நடிகர் சங்க நிர்வாகிகளுடன் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முரளி ராமசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், தனுஷ், சிம்பு, அதர்வா, யோகிபாபு, நடிகைகள் அமலா பால், லட்சுமிராய் உட்பட 14 பேர் மீது தயாரிப்பாளர்கள் புகார் கூறியதாக தெரிகிறது. இந்த 14 பேரிடமும் விளக்கம் கேட்டு ஒரு வாரத்துக்குள் பதில் அளிப்பதாக நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.