

சென்னை: ‘காதலில் சொதப்புவது எப்படி?’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தனது முதல் மனைவி அருணாவை விவாகரத்து செய்துள்ளார். இதையடுத்து நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டதாக தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷ், கூறியிருந்தார். இதையடுத்து, 2 வது திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டார் பாலாஜி மோகன்.
இந்நிலையில், தன்னைப் பற்றியும், தன்யா பாலகிருஷ்ணா பற்றியும் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக கல்பிகா கணேஷ் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் பாலாஜி மோகன்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்பிகா கணேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவர் குறித்தும் வெளியிட்ட வீடியோக்களை நீக்கிவிட்டதாகவும், இதற்கு மன்னிப்புகோரி புதிய வீடியோவை கல்பிதா வெளியிட்டுள்ளாதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கல்பிதா வெளியிட்டுள்ள வீடியோவில், “தன்யா பாலகிருஷ்ணன், பாலாஜி மோகன் பற்றி அவதூறு பரப்பியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை, அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.