

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இப்போது இயக்கியுள்ள படத்துக்கு 'ஆர் யூ ஓகே பேபி?’ என்று தலைப்பு வைத்துள்ளார். இதில், சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். அபிராமி, மிஷ்கின், முருகா அசோக், பாவல் நவநீதன், ரோபோ ஷங்கர், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறும்போது "நான் நடத்திய டாக் ஷோவின் பார்வையாளர்களுக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறேன். அந்த நிகழ்ச்சியில் எனக்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், அவர்களுக்கு இந்தப் படத்தின் மூலம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இந்தப் படம் ஒரு குற்றத்தின் சமூக மற்றும் சட்ட அம்சங்களைப் பற்றிய விவாதமாக இருக்கும். இது சொல்லப்பட வேண்டிய கதை. இந்தப் படத்துக்கு இளையராஜா நிகழ்த்திய மேஜிக்கை நேரில் உணர்ந்தேன். ஒரு பாடல்தான். அதை அவரே எழுதியுள்ளார்.
பின்னணி இசைச் சேர்ப்பு பணியின்போது, என்னையும் அருகே அமர வைத்தார். அவர் இசையின் அற்புதத்தை நேரில் கண்டேன். அது ஆச்சரியமாக இருந்தது. அவர் இசை இந்தப் படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. இது குழந்தையை பற்றிய கதை என்பதால் இந்தத் தலைப்பை வைத்துள்ளேன்” என்றார்