Published : 26 Jun 2023 06:34 AM
Last Updated : 26 Jun 2023 06:34 AM
பெருநகரமாகிவிட்ட சென்னையை, தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என எல்லை பிரித்து நஞ்சுண்டா (பிரபாகர்), மாறன் (ஜெய்ஸ் ஜோஸ்), வம்சி (விஷால் ராஜன்) ஆகிய 3 தாதாக்கள் நிழலுக சாம்ராஜ்யம் நடத்தி வருகின்றார்கள். இதில் யார் நம்பர் 1 என்பதில் முட்டலும் மோதலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு காலத்தில் பிரபல தாதாவாக இருந்த ’ரைட்டு’வை (சுந்தர்.சி) நஞ்சுண்டா சீண்டிவிட்டு வம்சியையும் மாறனையும் வீழ்த்த நினைக்க, ரைட் மீண்டும் வன்முறைப் பாதைக்கு திரும்பிகிறான். இந்த ரத்த ஆட்டத்தில் யார் கை ஓங்கியது என்பது கதை.
மூன்று தாதாக்களின் குற்றப்பட்டியல், அவர்களது ‘அசால்ட்’ அணுகுமுறை, பணம் பண்ணும் விதம் என்று முன்கதையுடன் கூடிய அறிமுகத்தை சுவாரஸ்யமாகக் காட்டி நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர்.
அதேபோல், வன்முறையை உதறிவிட்டு, நண்பருடன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரைட்டை அறிமுகப்படுத்தும் விதம் ‘கே.ஜி.எஃப்’ ரகமாக இருக்கிறது. என்றபோதும் நஞ்சுண்டாவின் அடியாட்களை அவர் ஒரு ‘நாய்’க்காகத் தாக்குவதும் அந்த நாயின் பின்னால் மறைந்திருக்கும் ‘ரைட்’டின் உணர்வுபூர்வமான தொடர்பும் அந்தக் கதாபாத்திரத்தைப் பின்தொடர வைக்கிறது. ரைட்டின் ஒவ்வொரு நகர்வும் அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் இருப்பதும் சுவாரஸ்யம்.
ரைட் பழைய ‘ஃபார்’முக்கு போய்விடக்கூடாது என்று எண்ண வைக்கும் அதேநேரம், அவர் திரும்பவும் வன்முறையைக் கையிலெடுத்தது சரிதான் என்று நியாயப்படுத்தும் 3 தாதாக்களின் அட்டூழியங்கள், திரைக்கதையின் நாலுகால் பாய்ச்சலுக்கு காரணமாக அமைகின்றன. குறிப்பாக, தனது பாதுகாப்புக்காக வம்சியிடம் சரணடைந்து வாழும் ஒரு முன்னணி சினிமா கதாநாயகிக்கு நிகழும் பாலியல் வன்கொடுமையும், அதைத் தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவும் தன்னை நம்பியிருந்த குடும்பத்தை, தன்னைப் பிடிக்கத் தூண்டிலாக்குவதும் என்று ரைட் முழு வீச்சில் களமாடக் கிளம்பும் காரணங்களை அழுத்தமாக வைத்து, சுவாரஸ்யமாகக் காட்சிப்படுத்திய வகையிலும் கவர்கிறார் இயக்குநர் வி.இசட்.துரை. அவரது திரைக்கதைக்கும் வலுவானகாட்சியமைப்புகளுக்கும் பக்க பலமாகத் தோள் கொடுத்திருக்கிறது மணி.ஜியின் வசனம்.
படத்தில் பல காட்சிகளில் மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகள் நிறைந்திருப்பதால், மனதளவில் பலவீனமானவர்கள், சிறார்கள் ஆகியோரை இந்தப்படத்துக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்துவிடலாம்.
படத்தின் மிகப்பெரிய குறை,காவல் துறையை வெறும் ஏவல்துறையாகச் சித்தரித்திருப்பது. என்னதான் தாதா என்றாலும் வம்சியின் கட்டளைகளுக்கு காவல்துறை கைகட்டி ஏவல்புரிவதுபோன்ற சித்தரிப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆக்ஷன் காட்சிகளில் வேகமும் வசன உச்சரிப்பில் நிதானமுமாக ‘ரைட்’ வேடத்தை வெயிட்டாக சுமந்திருக்கிறார் சுந்தர்.சி. தாதாக்களாக வரும் 3 வில்லன்களுக்கான நடிகர்கள் தேர்வும் அவர்களது நடிப்பும் கச்சிதம். ஹீரோயின் சித்தாராவாக வரும் பாலக் லால்வாணி, ரைட்டின் சகாவாக வரும் தம்பி ராமையா, அவர் மகளாக வரும் ஆயிரா ஆகியோரின் நடிப்பு, ரைட் கதாபாத்திரத்துக்கு உணர்வுபூர்வமான வலிமையைக் கொடுத்திருக்கிறது.
கதாபாத்திரங்கள், அவற்றுக்கான சிக்கல்கள், அதைத் தீர்த்து, தங்கள்வழியை நேர்செய்துகொள்ளவும் பழியைத் தீர்த்து கொள்ளவும் ஆடும் பகடையாட்டம் சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகளில் தெறிக்கும் ரத்தம், ‘தலைநகரம் 2’இன் தரத்தை கீழே இறக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT