திரை விமர்சனம்: அழகிய கண்ணே

திரை விமர்சனம்: அழகிய கண்ணே
Updated on
2 min read

திண்டுக்கல் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் சமூக அக்கறை கொண்ட நாடகங்களை நடத்திப் பாராட்டுப் பெறுகிறார் இன்பா (லியோ சிவகுமார்). அவரது கலைத் திறமையைப் பார்த்து அவரைக் காதலிக்கிறார், எதிர் வீட்டுப் பெண் கஸ்தூரி (சஞ்சிதா). காதலியின் அறிவுரையை ஏற்று சென்னை வரும் இன்பா, இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவியாளராகச் சேர்ந்து சினிமா கற்றுக்கொள்கிறார். இதற்கிடையில் வேலை கிடைத்து கஸ்தூரியும் சென்னைக்கு வர, இருவரும் திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அதன்பிறகு அவர்களுக்கு என்ன பிரச்சினைகள் வந்தன? அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது கதை.

முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு ஒரு பிரதானப் பிரச்சினையோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சினைகளோ இருப்பது தவறில்லை. ஆனால், அவற்றைத் தங்களுடையதுபோல் பார்வையாளர்களை உணர வைப்பதில்தான் திரைக்கதையின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்தக் கதையில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும் சூழ்நிலையில், குழந்தையை வளர்ப்பதில் இருக்கும் பிரச்சினையைப் பேசத் தொடங்குகிறார் இயக்குநர். சென்னையில் இருத்தலியல் பிரச்சினையோடு போராடும் புதிய தலைமுறைப் பெற்றோரின் கதையாகக் கொண்டு செல்ல விரும்புகிறார் என்று காத்திருந்தால், அதை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு, சாதிப் பிரச்சினைக்குத் தாவி விடுகிறார்.

சாதி ஆணவம் சார்ந்து தமிழ் சினிமாவில் களமாடும் வில்லன்களைப் பார்த்துப் பார்த்துச் சலித்துவிட்ட நமக்கு, இதில் வரும் வில்லன்களிடமும் எந்தப் புதுமையும் இல்லாததால் ரசிக்க முடியவில்லை.

கிராமத்தில் இன்பா - கஸ்தூரி இடையிலான காதல் காட்சிகள் ரசனையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல், திரைப்படம் உருவாகும் விதத்தையும் அதில் உதவி இயக்குநர்களின் பங்களிப்பையும் பிரபு சாலமன் சம்பந்தப்பட்ட காட்சிகள் வழியாக சித்தரித்த விதம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இந்தக் காட்சிகள் வரிசையாக வரும்போது, இது உதவி இயக்குநர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமோ என்றும் எண்ண வைத்துவிடுகிறார் இயக்குநர்.

இன்பா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள லியோ சிவகுமாருக்கு நடிப்பு அடம்பிடிக்கிறது. என்றாலும் உதவி இயக்குநராகச் சில காட்சிகளில் இயல்பாகப் பொருந்திக் கவர்கிறார். சஞ்சிதா வழக்கம்போல் தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை நடிப்பில் கச்சிதமாகப் பிரதிபலித்துச் செல்கிறார். சில காட்சிகளில், நிஜவாழ்வின் கதாபாத்திரத்தையே திரையிலும் இயல்பாக வெளிப்படுத்தியிருந்த பிரபு சாலமன் நடிகராகவும் களமிறங்கலாம்.

ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவும் என்.ஆர்.ரகுநந்தனின் இசையும் படத்தின் ஓட்டத்துக்கு உதவியிருக்கின்றன.

முதன்மையான பிரச்சினை எது என்பதை இறுதி செய்து, அதற்கான களத்தை விரிவும் சுவாரஸ்யமும் கொண்டதாக மாற்றத் தவறியதில் ‘அழகிய கண்ணே’ பழகிய பாதையில் மழலையைப்போல் தவழ்ந்து தடுமாறி நிற்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in