

சென்னை: பிரபல வில்லன் நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'கச்சேரி ஆரம்பம்', 'அரிமாநம்பி', 'காரி' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது ‘தயா’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனது மனைவி அனுகீர்த்தியை விவாகரத்து செய்திருந்தார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தெலுங்கு நடிகை விஷ்ணுபிரியா, நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தியை காதலிப்பதாகவும் அவரைத் திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ஜே.டி.சக்கரவர்த்தி, “எனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதல் இல்லை. ‘தயா’ தொடரில் இருவரும் சேர்ந்து நடித்தோம். அவ்வளவுதான். எங்களுக்குள் குரு- சிஷ்ய உறவுதான் இருக்கிறது. மற்றபடி ஏதுமில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். நடிகை விஷ்ணுபிரியா, தமிழில் ‘சிவப்பதிகாரம்’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார்.