

'பிக் பாஸ்' சீசன் 2 நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான செய்திக்கு சூர்யா தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
கமல் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தமிழகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளது. அந்நிகழ்ச்சியின் முடிவில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்போது பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கான பணிகளை விஜய் தொலைக்காட்சி தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும், இதனை சூர்யா தொகுத்து வழங்கவிருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இச்செய்தி குறித்து சூர்யா தரப்பில் விசாரித்த போது, "தொடர்ச்சியாக படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை சூர்யா தொகுத்து வழங்குவதாக வெளியான செய்தி தவறானது" என்று தெரிவித்தார்கள்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார்.