Published : 12 Jun 2023 08:08 PM
Last Updated : 12 Jun 2023 08:08 PM
சென்னை: “‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ எடுத்து அடுத்து வந்த படங்கள் சரியில்லாமல் சறுக்கி குழிக்குள் விழுந்து எழுந்து, ‘இசை’ என ஒரு படம் எடுத்து தரைக்கு வந்த உட்கார்ந்தேன்” என கடந்த கால சினிமா வாழ்க்கை குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பகிர்ந்துள்ளார்.
‘பொம்மை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “படத்தின் கதை என்னை ஈர்த்துவிட்டது. இயக்குநர் ராதா மோகன் பொம்மைக்கும் மனிதனுக்கும் காதல் வருகிறது என சொன்னதும் எனக்கு அது பிடித்துவிட்டது. அதற்கான நியாயத்தை அவர் கதையில் சேர்த்திருந்தார். ப்ரியா பவானி சங்கர் நிஜ பொம்மை போலவே நடித்திருக்கிறார். படம் நன்றாக வந்துள்ளது.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கரோனா குறுக்கிட்டது. இதனால் படம் தாமதமானது. ஆனால், கரோனாவால் எடுத்துகொண்ட காலம் ஒருவகையில் நல்லதாக அமைந்தது. அந்த நேரத்தில் நிறையவே மெனக்கெட நேர்ந்தது. பாடல்கள் மெருகேற கரோனா கொடுத்த காலம் உதவியாக இருந்தது. பின்னணி இசைக்காகவே நீங்கள் இந்த படத்தை பார்க்கலாம். யுவன்சங்கர் ராஜா அந்த அளவுக்கு இசையமைத்துள்ளார்.
ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக என் வாழ்க்கையை தொடங்கினேன். அங்கிருந்து திட்டமிட்டு இயக்குநராகி சம்பாதித்து அதிலிருந்து தயாரிப்பாளராகி அந்த காசை வைத்து ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ எடுத்து அடுத்து வந்த படங்கள் சரியில்லாமல் சறுக்கி குழிக்குள் விழுந்து எழுந்து, ‘இசை’ என ஒரு படம் எடுத்து தரைக்கு வந்த உட்கார்ந்தேன்.
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தின் மூலம் மீண்டும் திரையில் நுழைந்து சம்பாதித்து மீண்டும் தற்போது படத்தை தயாரித்துள்ளேன். இடையில் அபிதாப் பச்சனை வைத்து படம் தயாரிக்க முடிவெடுத்து அது நின்றுபோன வலியில் இருந்தேன். நான் திருப்பி திருப்பி எனக்கு வரும் பணத்தை சினிமாவுக்குள்தான் முதலீடு செய்து வருகிறேன். உணர்வுகளின் அடிப்படையில் இயக்கப்பட்ட இந்தக் கதையில் நான் சம்பாதித்த காசை முதலீடு செய்திருக்கிறேன். மக்கள் ஆதரவு கொடுத்தால் அடுத்தடுத்த திட்டங்கள் வைத்துள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT