

“தண்டட்டி நம் வாழ்க்கை கதைதான். எல்லோரோட குடும்பத்துக்குள்ளயும் இப்படியொரு கதையை பார்த்திருப்போம். இதைக் கடந்துதான் வந்திருக்கோம். நாம மறந்த அல்லது மறக்காத ஒரு ‘ஃபேமிலி டிராமா’வை ரத்தமும் சதையுமா சொல்ற படமா இது இருக்கும். படம் பார்க்கிற எல்லோருமே கதையோட தங்களைத் தொடர்புபடுத்தி பார்த்துக்க முடியும்”- பெரும் நம்பிக்கையுடன் பேசுகிறார், இயக்குநர் ராம் சங்கையா. சிம்புதேவன் உட்பட சில இயக்குநர்களிடம் சினிமா கற்றுவிட்டு, இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
‘தண்டட்டி’யை சுற்றி நடக்கிற கதைங்கறதால இந்த டைட்டிலை வச்சீங்களா?
தண்டட்டி என் வாழ்க்கையோட கலந்த விஷயம். அதை காதுல மாட்டிகிட்டு, என்னை தூக்கிச் சுமந்த அப்பத்தாக்களோடயும் அவங்க சொன்ன கதைகளையும் கேட்டு வளர்ந்தவன் நான். சின்ன வயசுல நாம பார்த்த, மகிழ்ந்த விஷயங்கள் இன்னைக்கு நம்மை விட்டுத் தொலைஞ்சுட்டே இருக்கு. நம் பண்பாடும் கலாச்சாரமும் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டு வருது. பெரும்பாலான கிராமங்களே இன்னைக்கு சிறு நகரங்களா மாறிப்போச்சு. இன்னும் பத்து, பதினைஞ்சு வருஷங்கள்ல தண்டட்டின்னா என்னன்னு கேட்க ஆரம்பிச்சிருவாங்க. அதனால, கிராமத்து உணர்வுகளை மையமா வச்சு ஒரு கதை பண்ணலாம்னு நான் நினைச்சதும் எனக்குள்ள வந்து உட்கார்ந்தது ‘தண்டட்டி’தான். அதைச் சுற்றி ஒரு கதை பண்ணினேன். அதுக்கு ‘தண்டட்டி’ன்னே தலைப்பு வச்சேன். தண்டட்டிக்கு அடையாளமாகவும் இந்தப் படத்தைக் எடுத்துக்கலாம். குடும்பத்தோட அமர்ந்து சிரிச்சி, ரசிக்கும்படியா கதை இருக்கும். இயல்பா ஒரு ஊருக்குள்ள வாழ்ந்துட்டு வந்த உணர்வையும் இந்தப் படம் கொடுக்கும்.
டைட்டிலுக்கு கீழே ‘தங்கத்தின் கதை’ன்னு கேப்ஷன் வச்சிருக்கீங்களே? தங்கம் பற்றி ஏதும் பேசறீங்களா?
ஒரு பிணத்து காதுல கிடந்த ‘தண்டட்டி’ திடீர்னு காணாமப் போயிடுது. போலீஸுக்கு தகவல் போகுது. போலீஸ்காரர் வந்து அதை எப்படி கண்டுபிடிக்கிறார்னு கதை போகும். அதன் வழியா கிராமத்து உறவுகளுக்குள்ள நடக்கிற விஷயங்கள், அவங்களோட ஈகோ மோதல், பாசம், பகையை சொல்றேன். இதுல ரோகிணி மேடம் கேரக்டரின் பெயர் தங்கப் பொண்ணு. அவங்களைச் சுற்றி நடக்கிற கதைங்கறதால, இது தங்கத்தின் கதைன்னு வச்சிருக்கோம். உசிலம்பட்டி, ஆண்டிபட்டி பகுதிகள்ல நடக்கிற கதை இது.
நாயகனா பசுபதியை தேர்வு பண்ணி னதுக்கு ஏதும் காரணம் இருக்கா?
இந்தக் கதைக்கு அவர்தான் நாயகன்னு முதல்லயே முடிவு பண்ணிட்டேன். பசுபதி சார் பல படங்கள்ல வில்லன், குணசித்திர வேடங்கள்ல நடிச்சிருந்தாலும் ஹியூமரும் அவர் நல்லா பண்ணுவார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட காமெடியை இப்பப் பார்த்தாலும் ரசிக்கும்படியா இருக்கும். அதுமட்டுமில்லாம அவர் தோற்றமும் தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாதிரிதான் இருக்கும். அவர் பொருத்தமா இருந்ததால கதைச் சொன்னேன். கேட்டதுமே, நல்ல கதை, நடிக்கிறேன்னார். இதுல ஹெட் கான்ஸ்டபிளா வர்றார். அதே போல ரோகிணிமேடம் அருமையா பண்ணியிருக்காங்க. விவேக் பிரசன்னா, மதுரை ஸ்லாங் பேசி, அப்படியே குடிகாரரா வாழ்ந்திருக்கார். படத்துல நடிச்சிருக்கிற எல்லோருமே அந்த கேரக்டரா மாறியிருக்காங்க.
முதல் படம் பண்றவங்க பெரும்பாலும் ஹீரோவை தேடிதான் கதை சொல்வாங்க...
இது வழக்கமான ஹீரோ, ஹீரோயின் கதை இல்லை. ஒரு வாழ்வியலை சொல்ற படம். நம்ம வாழ்க்கையிலயே ஆயிரம் கதைகள் இருக்கு. அதுல இருந்து ஒரு நல்ல சினிமாவை கொடுக்கணுங்கறதுதான் என் கனவு. அப்பதான் எனக்குப் பின்னால வர்றவங்களும் இது போல, வாழ்க்கையில இருந்து ஒரு விஷயத்தை எடுத்து சினிமாவாக்க வருவாங்கன்னும் நினைச்சேன். அது என் கடமையும் கூட. ஒரு நல்ல சினிமா பண்ணும்போது ஏற்படற சின்ன சின்னப் பிரச்சினைகளையும் கடந்துதான் இதைப் பண்ணியிருக்கேன். இந்தக் கதைக்கு ஹீரோக்கள் தேவையில்லை. நடிகர்கள் போதும்னு நினைச்சேன்.
கிராமங்கள்ல ஷூட் பண்ண வீடு தர மறுத்தாங்களாமே?
முற்றம் இருக்கிற வீடு வேணும்னு தேடினோம். கிராமங்கள்ல சில நடைமுறை பழக்க வழக்கங்கள் இருக்கு. ஒரு இறப்பு நடந்த வீடா, காட்டறதுக்கு சிலர் சம்மதிக்கலை. அதனால நிறைய தேடினோம். கதையில தப்பா எதையும் காட்டலை. காமெடியான படம்னு சொல்லி புரிய வச்சதுக்குப் பிறகு சிலர் சம்மதிச்சாங்க. ஊர்க்காரங்களே சில கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அறிமுக இயக்குநர்களுக்கு ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமிதான் ஆஸ்தான தோழர்னு சொல்றாங்களே?
ஆமா. பொதுவா புதுசா படம் இயக்குற இயக்குநருக்கு அனுபவமுள்ள ஒளிப்பதிவாளர் அமைஞ்சாதான் நல்லா இருக்கும். உதவி இயக்குநராக ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை செஞ்சிருந்தாலும் இயக்குநரா களத்துல இறங்கும்போது சில தடுமாற்றங்கள் இருக்கும். அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள் இருக்கும்போதுதான், குறிப்பிட்ட நாட்கள்ல படத்தை முடிக்க முடியும். அதனால அவர்தான் இந்தக் கதைக்கு சரியா இருப்பார்னு முடிவு பண்ணி கேட்டேன். கதையை கேட்டுட்டு சரி பண்றேன்னார். மகேஷ் முத்துசாமி சாரை பொறுத்தவரை, ரொம்ப மென்மையான மனிதர். அவர் ஸ்பாட்ல இருக்கிறதே தெரியாது. அவரோட அனுபவம் இந்தப் படத்துக்குப் பெரிய பலம். சுந்தரமூர்த்தி இசை அமைச்சிருக்கார்.