போர் தொழில் Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் விருந்து!

போர் தொழில் Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் விருந்து!
Updated on
2 min read

திருச்சியில் பெண்களை குறிவைத்து ஒரே ஃபார்மெட்டில் தொடர் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. எந்தவித தடயமும் கிடைக்காததால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளூர் காவல் துறை திணறுகிறது. இதனால், இந்த வழக்கு கிரைம் பிரான்ச் எஸ்.பி.லோகநாதனிடம் (சரத்குமார்) ஒப்படைக்கப்படுகிறது. அவரிடம் புதிதாக டிஎஸ்பியாக பணி நியமனம் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) பயிற்சிக்காக இணைகிறார். சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருவரும் விசாரணையை தொடங்குகின்றனர்.

இறுதியில், கொடூரக் கொலைகளை அரங்கேற்றும் சீரியல் கில்லர் யார்? எதற்காக அவர் இப்படியான கொலைகளை செய்கிறார்? பின்புலம் என்ன? - இதையெல்லாம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கும் படம்தான் ‘போர் தொழில்’.

முறையான குழந்தை வளர்ப்புக்கான தேவையையும், திருமண உறவுச் சிக்கல்களில் எழும் முரண்களை களைய வேண்டியதற்கான அவசியத்தையும் முன்வைத்து ஒரு அழுத்தமான சீரியல் கில்லர் கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ராஜா. அவர் கட்டமைக்கும் அந்த உலகம் வெறும் சஸ்பென்ஸ் த்ரில்லருடன் சுருங்காமல் குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் பின்னாலிருக்கும் சமூக உளவியல் காரணிகளை அலசி விடை தேட எத்தனிக்கிறார். அத்துடன் இரண்டு வெவ்வேறு குணாதிசயம் கொண்ட முதன்மைக் கதாபாத்திரங்களை ‘விசாரணை’ என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி நகர்த்திச் செல்லும் வகையிலான திரைக்கதை பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.

உதாரணமாக ‘கோல்டு’ மெடல் வாங்கி வெறும் படிப்பை மட்டுமே வைத்துக்கொண்டு களத்துக்கு வரும் அசோக் செல்வன் கதாபாத்திரத்தை அனுபவம் வாய்ந்த உயர் அதிகாரியான சரத்குமார் அணுகும் விதமும், இரண்டு கதாபாத்திர முரண்களும் கதையை எங்கேஜிங்காக்குகிறது. அவர்களுக்கு இடையேயான உரையாடல்கள் நகைச்சுவை கலந்து எழுதியிருப்பது ஈர்ப்பு.

குறிப்பாக சீரியல் கொலைகள் குறித்து சரத்குமார் விவரிக்கும் காட்சி, கொலைகாரனை நெருங்கும் காட்சியும், இடைவேளை என விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி கடக்கும் முதல் பாதி முத்திரை பதிக்கிறது. ‘பயந்தவனெல்லாம் கோழை கிடையாது; பயந்து ஓட்றவன் தான் கோழை’, ‘உங்க வேலைய நீங்க சரியா பாத்தீங்கன்னா; எங்க வேல கம்மியாகும்’, ‘கொலைகரானுக்கு கொலை ஒரு அடிக்‌ஷன்’, ‘நம்ம பண்ற வேலை நமக்கு மரியாதைய தேடித்தரும்’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.

‘அல்வா’ கணக்காக மொழுமொழுவென க்ளீன்ஷேவ் செய்துகொண்டு படிப்பு வாசம் மாறா இன்னசென்ட் இளைஞராக அசோக் செல்வன் நகைச்சுவை கலந்த உடல்மொழி, ஆங்காங்கே சில ஒன்லைன்கள், அறிவுஜீவியாக காட்டிக்கொள்ள செய்யும் செயல்கள் என படம் முழுக்க ஈர்க்கிறார். துப்பாக்கியை வைத்து அவர் காட்டும் வித்தை அப்லாஸ் அள்ளுகிறது. கடுகடுப்பான முகத்துடன் கறார் காட்டும் உயர் அதிகாரியாகவும், எமோஷனலான காட்சி ஒன்றில் முகத்திலிருந்து மொத்த நடிப்பை கடத்தும் இடத்திலும் ‘மூத்த’ நடிகர் என்ற முத்திரையைப் பதிக்கிறார்.

நிகிலா விமலுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் நேர்த்தி காட்டுகிறார். மறைந்த நடிகர் சரத்பாபுவின் சர்ப்ரைஸ் கதாபாத்திரமும், அதற்கான அவரின் நடிப்பும் யதார்த்தம். ஹரீஷ்குமார் எதிர்மறை கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். தேனப்பன் கலங்கும் காட்சிகளில் கவனம் பெறுகிறார்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை காட்சிப்படுத்தப்படாத கதாபாத்திரமாகவே படம் முழுக்க பயணிக்கிறது. காட்சிகளைத் தாண்டி சில இடங்களில் தனது இசையால் பயமுறுத்துபவர் சில இடங்களில் அமைதியை பரவ விட்டது படத்துக்கு பெரும் பலம். கலைச் செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகள் தனித்து தெரிகின்றன.

முடிந்த அளவு தான் எடுத்துக்கொண்ட கதையை சஸ்பென்ஸ் குறையாமல் அதே வேகத்தில் இரண்டாம் பாதியிலும் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால், சைக்கோ த்ரில்லர் படங்கள் என்றாலே பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் தொடர்ந்து கொலைக்குற்றவாளிகளாக சித்தரிப்பதற்கான நியாயம் மட்டும் புரிவதில்லை. மற்றபடி, விறுவிறுப்பாக க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கான விருந்தை ‘போர் தொழில்’ மசாலா குறையாமல் பரிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in