

நடிகை த்ரிஷா தனது திரைப்பயணத்தில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி வருகிறார். அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமான த்ரிஷா திரைத்துறையில் 21 வருடங்களைக் கடந்துள்ளார். 2014-ம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் அமையாத த்ரிஷா ‘கொடி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். பின்னர் 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படம் த்ரிஷா வாழ்க்கையில் முக்கிமான படமாக அமைந்தது. அடுத்து குந்தவையாக ‘பொன்னியின் செல்வன்’ மூலம் மீண்டும் திரையில் தோன்றிய த்ரிஷாவைக் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், த்ரிஷா தற்போது திரைத் துறையில் தன்னுடைய மற்றொரு இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். காரணம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் விஜய்யுடன் இணைந்து ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ‘குருவி’ படத்தில் 2008-ம் ஆண்டு விஜயுடன் அவர் இணைந்து நடித்திருந்தார். ‘லியோ’ படத்துக்கு பிறகு த்ரிஷா, அஜித் நடிப்பில் உருவாகும் ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘ராம்’ படத்திலும் நடித்துவருகிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
தவிர, சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷின் 50-வது படத்திலும் நடிகை த்ரிஷா நடிப்பார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, கதாநாயகியை மையமாக கொண்ட ‘தி ரோடு’ படத்தில் த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.