

சென்னை: பிரவீன் இயக்கத்தில் உருவாகும் படம், ‘தாமி’. ஜாலியான கதையாக உருவாகும் இதில் சாந்தினி தமிழரசன் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சுவிதா ராஜேந்திரன் நடிக்கிறார். இவர், இந்தப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட சுவிதா, மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்.
அவர் கூறும்போது, “சிறு வயதில் இருந்தே நடிப்பு ஆசை. கமல்ஹாசன் நடிப்பைப் பார்த்து எனக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. என் குடும்பத்தில் யாரும்சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லை. படிப்பை முடித்ததும் நடிக்கப் போகிறேன் என்றதும் பெற்றோர்கள் எதிர்த்தார்கள். பிறகு சென்னை வந்து மாடலிங் செய்தேன். பின் நடிப்பு கற்றுக்கொண்டேன். இப்போது இந்தப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது. சிறந்த கதைகளைத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன்” என்றார்.