

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மாமன்னன்’. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
‘மாமன்னன்’ வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்பது என் ஆசை. இதன் குரல் கேட்கப்பட வேண்டும். இப்படிபட்ட படம், மாரி அரசியல் என்று சொன்னார்கள். இது நம்ம அரசியல். அப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தலைமுறையில் இருக்கிறோம். அதற்கு இந்த மாதிரி படங்கள் வரவேண்டும். அதை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குப் பாராட்டுகள். வடிவேலு இதில் மாமன்னனாக இருக்கிறார். ‘தேவர் மகன்’ படத்தின் கிளைமாக்ஸில் என் காட்சியையும் தாங்கிப்பிடித்தவர் வடிவேலு. மாரி செல்வராஜ் எதிர் தரப்பிற்கும் சம உரிமை கொடுக்கிறார். அதில் அவருடைய சம உரிமை தெரிகிறது. இந்தப் படத்தின் சமூக நீதி சார்ந்த உரையாடலை கேட்டே ஆகவேண்டும். அது சார்ந்த உரையாடல் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “இதில், மாமன்னன் வடிவேலுதான். அவர் இல்லை என்றால் மாமன்னன் இல்லை. இப்போதைக்கு இதுதான் என் கடைசிப்படம். இன்னும் 3 வருடம் கழித்து நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் மட்டும்தான் நடிப்பேன்” என்றார்.
விழாவில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, சூரி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச் வினோத், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் யுகபாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.