

மலையாள நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்தபோது, சண்டைக்காட்சியில் அவருக்கு காயம் ஏற்பட்டு கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டது. கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் கடந்த புதன்கிழமை வீடு திரும்பினார். மருத்துவர்கள் அவரை 2 வார காலம் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அவர் காயமடைந்ததை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்தனர். இது கர்மாவின் வினை என்று சிலர் கூறியிருந்தனர். இதற்குப் பதிலளித்து பேஸ்புக்கில் விநாயகன் வெளியிட்ட பதிவில், “உங்களைப் போல மோசமான செயல்களைச் செய்யும்போது இந்தக் காயம் ஏற்படவில்லை. அறிவாளிகள் போல் நடித்து, அறிவில்லாதவர்களை நம்பி வேலை செய்தபோது இது நடந்தது. விநாயகன் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்த உலகில் எதுவும் மாறாது. ‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்கத் தேவையில்லை.
விநாயகன் தனது சொந்த கர்மாவின் பலனை எதிர்கொள்வார். உங்கள் சாபங்களையும் போலி அனுதாபங்களையும் என்னிடமிருந்து விலக்கி வையுங்கள். விநாயகன் திமிர்பிடித்தவன் அல்ல; சுயமரியாதை கொண்ட மனிதன். காலமே என்னைக் கொல்லும் வரை, நான் பேசிக்கொண்டே இருப்பேன். ஜெய் ஹிந்த், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.