

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் கடந்த பிப்.26-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். உதய்ப்பூரில் நடந்த அவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெற்றது. தங்களது ரசிகர்களுக்காகவும் அவர்கள் விருந்து வைத்தனர்.
இந்நிலையில், இவர்கள் திருமணத்துக்குப் பிறகு திதி என்ற சிறுமி “எங்களை ஏன் திருமணத்துக்கு அழைக்கவில்லை” என இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு வருத்தம் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவை பார்த்த விஜய் தேவரகொண்டா, அவரை தங்களது வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதாக கமென்ட் செய்திருந்தார்.
இந்நிலையில், வாக்குக் கொடுத்தபடியே அச்சிறுமியை குடும்பத்தினருடன் அழைத்து தங்கள் வீட்டில் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் விருந்து வைத்துள்ளனர். அவர்களே சிறுமிக்கு உணவு பரிமாறி, பரிசுகளையும் கொடுத்துள்ளனர். இந்தச் சந்திப்பை அந்த சிறுமி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.