எதிர்மறை விமர்சனம்: யூடியூபர்களுக்கு ‘டாக்ஸிக்’ படக்குழு நோட்டீஸ்

எதிர்மறை விமர்சனம்: யூடியூபர்களுக்கு ‘டாக்ஸிக்’ படக்குழு நோட்டீஸ்
Updated on
2 min read

யஷ் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘டாக்ஸிக்’ படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்தது தொடர்பாக படக்குழு தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக பிரபல யூடியூபர்கள் சமூக வலைதளங்களில் தகவல் பகிர்ந்துள்ளனர்.   

பிரபல தமிழ் யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘டாக்ஸிக்’ பட விமர்சனத்துக்காக யஷ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. நிஜ வாழ்விலும் அவர் ஒரு கம்பீரமான மனிதராக இருப்பார் என்று நினைத்தேன். அவர் இன்னுமொரு செல்வாக்கு மிக்க பணக்காரரைப் போல தெரிகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் மற்றொரு யூடியூபரான சூரஜ் குமார், படக்குழு தனக்கு அனுப்பிய நோட்டீஸின் ஸ்க்ரீன் ஷாட்டை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, ‘என்னுடைய விமர்சனத்துக்காக நோட்டீஸ் அனுப்பிய ‘டாக்ஸிக்’ படக்குழுவுக்கு நன்றி’ என்று  தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு முன்பாக கிறிஸ்டோபர் கனகராஜ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சி ஒன்றை பகிர்ந்து, ‘என்னடா கோர்ட்  நோட்டீஸ் எல்லாம் அனுப்புறீங்க’ என்று தெரிவித்துள்ளார்.

சூரஜ் குமார் பகிர்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டின்படி, கேவிஎன் – மான்ஸ்டர் மைண்ட் நிறுவனங்கள் சார்பாக, பெங்களூருவைச் சேர்ந்த ஏப்லெக்ஸ் (Aiplex) சாஃப்ட்வேர் நிறுவனம் இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீஸில் உள்ள தகவலின் படி, ‘டாக்ஸிக்’ படத் தயாரிப்பாளர்கள் சார்பில், அத்திரைப்படம் தொடர்பாக இணையத்தில் வரும் விவகாரங்ளை கையாளுவதற்கான அதிகாரம் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூலை 13-ம் தேதி முதல் செப்டம்பர் 26-ம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பெங்களூரு உரிமையியல் மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ‘டாக்ஸிக்’ படத்தயாரிப்பாளர்கள் தொடர்ந்த வழக்கில், படம் குறித்து பொய்யான அவதூறு தகவல்களை பரப்புவதற்கோ, வெளியிடுவதற்கோ ஆகஸ்ட் 22-ம் தேதி இடைக்கால தடை விதித்து இருந்தது. இத்தடை தற்காலிகமானது என்றும், வழக்கின் அடுத்த விசாரணை நாளான ஆகஸ்ட் 28-ம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் தெரிவித்திருந்தது. இந்த பின்னணியில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.

யஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாக்சிக் படம், ஆகஸ்ட் 26-ம் தேதி  வெளியானது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகின. விமர்சகர்கள் மட்டும் இன்றி படம் பார்த்த பார்வையாளர்களும் படத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர். இது, படத்தின் வசூலிலும் தாக்கம் செலுத்தியது. முதல் நாளில் இந்தியாவில் ரூ.101 கோடி வசூல்  செய்திருந்த டாக்ஸிக் படம் இரண்டாவது நாளில், சுமார் ரூ.36 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மினி வசந்த், தாரா சுதாரியா உள்ளிடோர் நடித்திருக்கின்றனர்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. 

எதிர்மறை விமர்சனம்: யூடியூபர்களுக்கு ‘டாக்ஸிக்’ படக்குழு நோட்டீஸ்
நெகட்டிவ் விமர்சனம் எதிரொலி: 75% சரிந்த ‘டாக்ஸிக்’ வசூல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in