

‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடித்து வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ, எதிர்பாராத சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு மயானத்தில் சில வெளிநாட்டவர்கள் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அங்கு வரும் ஒரு காரில் இருந்து இறங்கும் ஒரு நபர் வெடிகுண்டுக்கான ஒரு டெட்டனேட்டரை காருக்கு அடியில் வைக்கிறார். அதன் பிறகு அந்த டெட்டனேட்டரை வெடிக்க வைக்க இதுவரை உலக சினிமாவில் இல்லாத ஒரு புது ஐடியாவை யோசித்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்.
அதன்பிறகு காரில் இருந்து இறங்கி வரும் ஹீரோ யஷ், எதிரிகளை ஒற்றை ஆளாக சுட்டு வீழ்த்துகிறார். ‘கேஜிஎஃப்’ ராக்கி பாய் கதாபாத்திரத்தை மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் அவரது ராயா கேரக்டர் இருக்கிறது.
ஒரு பெண் இயக்குநர் இப்படியான காட்சிகளை இடம்பெறச் செய்யலாமா என்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படி ஒரு காட்சியை இடம்பெறச் செய்த இயக்குநரை பாராட்ட வேண்டும் என்று இன்னொரு தரப்பு அவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் தவறவில்லை. இப்படம் வரும் மார்ச் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.