

கன்னட ஹீரோ சதீஷ் நினாசம் நடித்துள்ள திரைப்படம், ‘ரைஸ் ஆஃப் அசோகா’. இதில் சப்தமி கவுடா, பி.சுரேஷ், அச்யுத்குமார், சம்பத் மைத்ரேயா, கோபாலகிருஷ்ணா தேஷ்பாண்டே, யஷ் ஷெட்டி, ரவிசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லவித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு பூர்ணசந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார். வினோத் வி.தோண்ட்லே இயக்கியுள்ள இப்படத்தை விருத்தி கிரியேசன் - சதீஷ் பிக்சர் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வர்தன் ஹரி, ஜெய்ஷ்ணவி, சதீஷ் நினாசம் இணைந்து தயாரித்துள்ளனர். கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சதீஷ் நினாசம் கூறும்போது, “என்னுடைய 10 ஆண்டுகால திரைப் பயணத்தில் பத்து, பன்னிரண்டு படங்களில் தான் ஹீரோவாக நடித்திருக்கிறேன். ஏனெனில் உணர்வுப்பூர்வமான கதைகளைத் தேர்வு செய்து தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். என்னால் வருடத்துக்கு இரண்டு, மூன்று படங்களில் நடிக்க முடியாது. அதனால் கதைகளைத் தேர்வு செய்து, காத்திருந்து பிறகுதான் நடிக்கிறேன். இந்தக் கதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியான சாம்ராஜ் நகரைக் கதைக்களமாகக் கொண்டது.
1970-களில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது. இந்தக் கதை தமிழகத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறது. இப்படத்தில் 1000 பேர் பணியாற்றியுள்ளனர். மொத்தம் 138 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 70-களில் இருந்த காலகட்டத்தைப் படத்தில் அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறோம். 1400 கிராபிக்ஸ் ஷாட்கள் உள்ளன. அந்த காட்சிகள் யதார்த்தமாக இருப்பதால், யாரும் அதைக் கண்டுபிடிக்க முடியாது” என்றார்.