பெண்களின் ஆடை பற்றி சர்ச்சை பேச்சு: நடிகருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
தெலுங்கு நடிகர் சிவாஜி நடித்துள்ள படம், ‘தண்டோரா’. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகைகள் அணியும் உடைகள் குறித்துப் பேசினார். “கதாநாயகிகள் கண்டபடி உடைகள் அணிந்தால் நீங்கள் தான் சிக்கலை சந்திக்க வேண்டி வரும்.
என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம், எடுத்துக் கொண்டாலும் பிரச்சினை இல்லை. உங்கள் அழகு சேலையில்தான் இருக்கிறது. உடல் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை. சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது” என்றார். இது தொடர்பாக அவர் மேலும் பேசிய பேச்சு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதற்கிடையே தெலங்கானா மகளிர் ஆணையம் இதுபற்றி விளக்கம் அளிக்க அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “பெண்களை அவமதிக்கும் நோக்கத்துடன் அவர்களின் உடைகள் பற்றி வேண்டுமென்றே பேசியிருக்கிறீர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அதன்படி, டிச.27-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
சிவாஜி மன்னிப்பு: இந்நிலையில் நடிகர் சிவாஜி மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாரையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் என் கருத்துகளால் திரைப்படத் துறையில் உள்ள பெண்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டிருந்தால், தவறு என்று எந்த பெண்ணும் நினைத்திருந்தால் அதற்காக மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
