

‘வாரணாசி’ படத்தின் டைட்டில் டீசர் அறிமுக விழாவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சரியானபோது நான் உணர்ச்சிவசப்பட்டு அழுதேன்’ என இயக்குநர் ராஜமவுலியின் மகனும், படத்தின் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.
சுமாஸ் ஹவுஸ் என்ற உரையாடல் நிகழ்ச்சியில், அக்டோபர் 2-ம் தேதி வெளியாக இருக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபுள்’ பட நடிகர் ஃபகத் ஃபாசில் அதில் நடித்த குழந்தை நட்சத்திரத்துடன் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கார்த்திகேயாவும் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் சுமா, ஃபகத் ஃபாசிலிடம், ‘நான் இதுபோன்ற பாடல் வெளியீடு மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளேன்.
ராஜ்மவுலியின் ‘ஸ்டூடன்ட் நம்.1’ தான் நான் தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி. அவர் மட்டும்தான் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்க்கும் ஒரே இயக்குநர். அதற்கு பிறகு, இவர்தான் (கார்த்திகேயா) டீசர் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு ஒத்திகை பார்த்தது” என்றார்.
தொடர்ந்து கார்த்திகேயாவைப் பார்த்து, ‘‘வாரணாசி’ பட நிகழ்வில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது எப்படி இருந்தது?’ என்று கேட்கிறார்.
அதற்கு பதில் அளித்த எஸ்.எஸ்.கார்த்திகேயா, ‘அந்தச் சூழல் ஒரு போர்க்களம் போல இருந்தது. உண்மையைச் சொன்னால் நான் அழுதேன், உணர்ச்சிவசப்பட்டேன், கோபம் வந்தது. ஆனால், அது யார் மீதான கோபம் எனத் தெரியவில்லை. அது யாருடைய தவறும் இல்லை. பாபா (ராஜ்மவுலி) சொன்னதைப் போல முன்பே நாங்கள் அதைச் சோதித்து பார்த்திருக்க வேண்டும். எங்களின் தொழில்நுட்பக் குழு மிகவும் வலுவானதுதான்.
அன்று நாங்கள் உணர்ந்த விஷயம் முன்பே அனைத்தையும் சோதித்திருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது முயற்சியில் பிரச்சினை சரியானதும் நான் ‘ஜெர்ஸி’ படத்தில் வரும் நானியைப் போல துள்ளிக் குதித்தேன். இதில் எந்த மிகையும் இல்லை’ என்று அந்த நாளை ராஜ்மவுலியின் மகன் நினைவுகூர்ந்தார்.
ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நாயகனாக நடிக்கும் படம் ‘வாரணாசி’. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த 2025, நவம்பரில் ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது அந்நிகழ்ச்சியில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு நிகழ்ச்சி சிறிது நேரம் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
மிகவும் எதிர்பார்ப்புக்குள் இருக்கும் ‘வாரணாசி’ படத்தில் மகேஷ் பாபுவுடன் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் 2027-ம் ஆண்டு வெளியாக இருக்கிறது.