

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார் பேசுகையில், “‘45’ என் 129-வது படம். என் முதல் படமான ‘ஆனந்த்’ செய்தபோது இருந்த அதே பயமும் பக்தியும் இந்தப் படத்திலும் எனக்கு இருந்தது. இயக்குநர் அர்ஜுன் ஜான்யா கதையை சொன்னபோது எப்படி இப்படி ஒரு கதையை உருவாக்கினார் என மிகவும் ஆச்சரியப்பட்டேன். ‘45’ என்பது ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு விநாடி என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இது ஒரு மனிதனின் கதை அல்ல, அனைவரையும் இணைக்கும் படம்.
கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கியபோது, நான் கீமோதெரபியில் இருந்தேன். ஒரு இயக்குநர் உருவாக்கியதை கலைஞன் முழுமையாக செய்தால்தான் அதற்கு மதிப்பு கிடைக்கும்.
அது டூயட் பாடலாக இருந்தாலும் சரி, கழிவறை சுத்தம் செய்வதாக இருந்தாலும் சரி. நாங்கள் இயக்குநரின் கனவை முழுமையாக்கியுள்ளோம். இப்படம் கண்டிப்பாக அனைத்து ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்” என்றார்.