

திரைப்படத் தலைப்புகள் குறித்த மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் புதிய உத்தரவுக்கு கேரளத் திரைப்பட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திரைப்படங்களின் ஆய்வு மற்றும் சான்றிதழ் வழங்கும் முறை குறித்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் புதிய வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது.
அதில், ‘‘முழுமையான மற்றும் இறுதி வடிவத்திலான திரைப்படங்களை மட்டுமே தணிக்கைக்கு சமர்ப்பிக்க வேண்டும். டீஸர்கள், டிரெய்லர்கள் மற்றும் விளம்பரப் பொருட்களில் இடம்பெறும் தலைப்புகள் உள்பட அனைத்துத் திரைப்படத் தலைப்புகளும் வாரியத்தின் ஆய்வு மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டவை. ஒரு தலைப்பைப் பதிவு செய்வது அல்லது சமர்ப்பிப்பதால் மட்டுமே அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல” என்பது உள்பட சில வழிகாட்டுதல்களை அறிவுறுத்தி இருந்தது.
இதற்கு கேரள திரைப்பட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அம்மாநில வர்த்தக சபையின் தலைவர் அனில் தாமஸ் கூறும்போது, “ஒரு படத்துக்கு நிலையான தலைப்பு இருப்பது, அந்தப் படம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளுக்கு மிக அவசியம். தலைப்பு எங்களிடம் பதிவு செய்யப்படும்போது, அத் தலைப்பு ஏற்கெனவே வேறு எங்காவது பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை மற்ற வர்த்தக சபைகளுடன் கலந்தாலோசித்து உறுதி செய்கிறோம்.
ஆட்சேபனைக்குரிய சொற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த, தலைப்புகளை முறையாக ஆய்வு செய்த பின்னரே அனுமதி வழங்குகிறோம். இந்நிலையில் திரைப்படத் தலைப்புகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் இருப்பது, அதிகார வரம்பின் தேவையற்ற விரிவாக்கம்’’ என்றார்.
“ஏற்கெனவே தணிக்கை வாரிய தலையீடு அதிகமாக உள்ள சூழலில், திரைப்படத் தலைப்பு கள் மீதும் அவர்களுக்கு முழுமையான கட்டுப்பாடு கிடைப்பதை அனுமதிக்க முடியாது” என்றும் அவர் கூறினார். இவரைப் போலவே மற்ற திரைப்பட அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.