

“செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான போரில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், நீங்கள் அதனுடன் இணைந்து போய்விட வேண்டும்” என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.
நடிகை ஜான்வி கபூர் குறித்து செயற்கை நுண்ணறிவு மூலம் போலியாக உருவாக்கப்பட்ட வீடியோக்களுக்கு தெலுங்கு திரையுலகம் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், ராம் கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘செயற்கை நுண்ணறிவுக்கு எதிரான போரில் உங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றால், நீங்கள் அதனுடன் இணைந்து போய்விட வேண்டும். அதற்கு எதிராக நீங்கள் போராடினால், அது உங்களை அழித்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த போலி வீடியோ விவகாரத்தில் தெலுங்கு திரை உலகினர் எதிர்வினையாற்றிய விதத்தை கடுமையாக அவர் விமர்சித்தும் இருந்தார்.
முன்னதாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், ‘அந்த ஆட்சேபத்துக்குரிய வீடியோவை அதிகமாக பிரபலப்படுத்தி, கோடிக்கணக்கான மக்கள் அதனை பார்க்க வைப்பதில்தான் இந்த பிரபலங்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அந்த வீடியோவை உருவாக்கிய குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்து, அதை வெளிப்படுத்தி இருப்பதுதான் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்கும். அதற்கு பதிலாக இவர்கள் செய்தது எல்லாம், ட்வீட் செய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளம், குற்றச்செயலான அந்த ஆட்சேபத்துக்குரிய வீடியோ மீது அதிக கவனம் ஈர்க்க வைத்ததுதான்’ எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜூனியர் என்டிஆர் - ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான, ‘தேவரா’ படத்தில் வரும் ‘சுட்டமல்லி’ பாடல் காட்சிகளை, சிலர் ஆபாசமாக உருவாக்கி வெளியிட்டிருந்தனர்.
அந்த வீடியோ காட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ஜூனியர் என்டிஆர், இது அருவருக்கத்தக்க வெட்கக்கேடான செயல் என்று சாடி, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதை கண்டித்திருந்த பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சட்டத் துறைகளும் தெலுங்கு சினிமா அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா, இதுபோன்ற உள்ளடக்கங்களை உருவாக்குவதும் பரப்புவதும் பாலியல் வன்கொடுமைக்கு சமமானது என கண்டித்திருந்தார்.