

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபவுஸி’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
நானியின் ‘பாரடைஸ்’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிசங்கர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘ஃபவுஸி’ படத்தின் வெளியீடு சற்றுத் தள்ளிப்போகிறது. ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸை இவ்வளவு பிரமாண்டமாக நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
இந்தப் படம் அவ்வளவு பிரமாண்டமாக இருக்கும். படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பது எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்றென்றும் உங்கள் நினைவில் நிற்கும் சிறந்த படமாக ‘ஃபவுஸி’ இருக்கும்’ என்று தெரிவித்தார்.
முன்னதாக, இப்படம் டிசம்பர் 3-ம் தேதி திரையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போது வெளியாகும் என்ற தகவலை தயாரிப்பாளர் தெரிவிக்கவில்லை.
ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‘ஃபவுஸி’. இப்படத்தில் அவருடன் இமன்வி, மிதுன் சக்ரபோர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சுதீப் சட்டர்ஜீ ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு சந்திரசேகர் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.