

விரைவில் பிரதமர் மோடி ‘அகண்டா 2’ பார்க்கவுள்ளதாக இயக்குநர் போயபத்தி சீனு தெரிவித்துள்ளார்.
பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அகண்டா 2’. டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. பின்பு பெரும் எதிர்பார்ப்புடன் டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இப்படம் பல்வேறு கிண்டல்களை எதிர்கொண்டாலும், 3 நாட்களில் ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.
இதனிடையே ‘அகண்டா 2’ வெற்றியைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இதில் பாலகிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அச்சந்திப்பில் இயக்குநர் போயபத்தி சீனு பேசும்போது, “விரைவில் டெல்லியில் ‘அகண்டா 2’ திரையிட இருக்கிறோம். அதில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தினை பற்றி கேள்விப்பட்டு, படம் பார்க்க உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
’அகண்டா 2’ பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. சில வெளிநாடுகளில் இப்படம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. மேலும், இப்படம் பாலகிருஷ்ணாவின் 5-வது ரூ.100 கோடி வசூலைத் தாண்டும் படம் என்ற சாதனையைப் புரியும் எனத் தெரிகிறது.