

‘புஷ்பா 2’ படத்தில் பெண் வேடத்தில் நடித்தது நான் எடுத்த துணிச்சலான முடிவுகளில் ஒன்று என நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் இந்தியாவின் ஷோஸ் டாப்பர்ஸ் 2026 பதிப்பின் அட்டைப் படத்தில் அல்லு அர்ஜுன் இடம்பெற்றுள்ளார். அந்த இதழுக்கு அளித்தப் பேட்டியின் சில விஷயங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “புஷ்பா படத்தின் வெற்றி, இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உத்வேகத்தை எனக்கு அளித்தது. சாதாரணமான விஷயங்களுக்கு இனி இடம் இல்லை. சிறப்பான விஷயங்களே இனிமேல் எடுபடும்.
பாக்ஸ் ஆபிஸ் அழுத்தம் என்பது ஒரு சிறப்பு உரிமைதான். நாட்டில் சிலருக்குதான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதனால் அழுத்தம் என்பதும் வரம்தான். ‘புஷ்பா 2’ படத்தில் பெண் வேடத்தில் நடித்தது நான் எடுத்தத் துணிச்சலான முடிவுகளில் ஒன்று’’ என்று தெரிவித்துள்ளார்.
‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் ஜக்கம்மா ஜாத்ரா திருவிழா காட்சியில் அல்லு அர்ஜுன் சேலை, நகைகள் அணிந்து உடலில் நீல வண்ணம் பூசி பெண் வேடமிட்டு நடித்திருப்பார்.
‘‘முதலில் பயமாக இருந்தது; பிறகு அது குறித்தத் தேடல் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், படத்தில் இந்தக் காட்சிதான் சிறப்பானதாக இருக்கப் போகிறது என்று நாங்கள் உணர்ந்தோம். ஒரு நடிகராக எனக்கு இது ஒரு சவாலான விஷயமாக இருக்கும் என்று நான் உணர்ந்தேன்.
இதைச் செய்தால் அது எனக்கு பெரிய அளவில் நல்ல பெயர் எடுத்துக்கொடுக்கும் என்றும் தெரிந்தது. நானும் சுகுமாரும் ஒன்றைத்தான் யோசித்தோம். அவர் சேலை உடுத்தி இருந்தாலும், அவர் ஆண் போலவே தெரிய வேண்டும். அந்த ஆண் தன்மை மாறக் கூடாது’’ என முன்பு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.