

நானியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.88 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் படம் ‘தி பாரடைஸ்’. ‘தசரா’ வெற்றிக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கும் இந்தப் படத்தில், மோகன் பாபு, ராகவ் ஜுயல், கயாது லோஹர், சம்பூர்ணேஷ் பாபு, சோனாலி குல்கர்னி உள்ளிட்டோருடன் கவுரவத் தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்தள்ளார்.
இந்தப் படம் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்து எதிர்மறை கருத்துக்கள் வெளியான நிலையிலும் படம் உலக அளவில் முதல் நாளில் ரூ.88 கோடி வசூலை கடந்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. நானியின் படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படம் ‘தி பாரடைஸ்’ என்றும் கூறப்படுகிறது.
வித்தியாசமான களம், கதாபாத்திரங்களின் அறிமுகங்கள், ‘பாரடைஸ்’ உலகத்தின் சூழல் என வழக்கமான வணிக சினிமாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அனுபவத்தை படத்தின் தொடக்கம் தருகிறது.
தாய்-மகன் இடையேயான பாச உணர்வு, ஹீரோ அறிமுக சண்டை, இடைவேளை காட்சி என முதல் பாதியில் சில காட்சிகள் ஈர்க்கின்றன. சில வசனங்கள் கைகொடுக்கவும் செய்துள்ளன. குறிப்பாக ஆரம்பத்திலேயே ஹீரோவின் கதாபாத்திரம் மற்றும் மாலிக்குடனான மோதலின் பின்னணி தெளிவாக நிறுவப்பட்டு விடுவது ஒரு பெரிய ப்ளஸ்.
ஆனால், இந்த விஷயங்களை தாண்டி மொத்த படத்திலும் பெரிதாக குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமே இல்லாமல் போனது ஆகப்பெரும் சோகம்.
தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்ட உலகமும், கதையின் தீவிரமும் அடுத்தடுத்த காட்சிகளில் அப்படியே நீர்த்துப் போகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆடியன்ஸை உள்ளிழுக்காமல், கொடூரமான சண்டைக் காட்சிகளை மட்டுமே இயக்குநர் நம்பியிருப்பது மிகப் பெரிய பலவீனம் என்ற விமர்சனப் பார்வைகள் மிகுந்துள்ளன.