

நானி நடித்துள்ள ‘த பாரடைஸ்’ படத்தில் மோகன்பாபு, கயாடு லோஹர், இந்தி நடிகர் ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்புர்ணேஷ் பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் வரும் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழாவில் நானி பேசும்போது, “தமிழ்த் திரைப்படங்கள் எனக்கு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவுக்கும் சினிமா மீதான ஆர்வத்துக்கும் சினிமா மீதான காதலுக்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள்தான் இன்ஸ்பிரேஷன்.
அதிலும் கமல்ஹாசன், மணிரத்னம், கே.பாக்யராஜ், பாரதிராஜா என பல சாதனையாளர்களைக் குறிப்பிடலாம். நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்துக்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும், சென்னைக்கும், தமிழ்நாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு.
என் மீது தமிழ் ரசிகர்கள் காட்டும் அன்பு அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன். என் திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் இது. பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்” என்றார்.