கொரட்டாலா சிவா இயக்கத்தில் பாலகிருஷ்ணா - அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரட்டாலா சிவா இயக்கத்தில் பாலகிருஷ்ணா - அதிகாரபூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான 'தேவரா: பாகம் 1' திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கொரட்டாலா சிவா தனது அடுத்த படத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் புதிய படத்தின் அறிவிப்பு வெள்ளிக்கிழமை அன்று போஸ்டருடன் வெளியாகியுள்ளது. 

யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 'NBK112' என்று தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. கொரட்டாலா சிவா அடுத்ததாக 'தேவரா: பாகம் 2' பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தத் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் வெளியான 'தேவரா: பாகம் 1' சுமார் 428 கோடி ரூபாய் வசூலித்த போதிலும், கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் இல்லாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், ஜூனியர் என்டிஆர் மற்றும் தயாரிப்பாளர் சுதாகர் மிக்கிலினேனி ஆகியோர் அந்த படம் கைவிடப்படவில்லை என்றே பேசி வந்தனர்.

இந்த சூழலில் பாலகிருஷ்ணாவின் புதிய படத்தை கொரட்டாலா சிவா இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான திரைக்கதை ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலகிருஷ்ணா தற்போது கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தனது 111-வது படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கொரட்டாலா சிவாவின் இந்தப் படத்தில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்டிஆர் தற்போது 'டிராகன்' படத்தில் கவனம் செலுத்தி வருவதால், கொரட்டாலா சிவா தனது கவனத்தைப் பாலகிருஷ்ணா படத்தின் பக்கம் திருப்பியுள்ளார். 'அகண்டா', 'பகவந்த் கேசரி' என தொடர் வெற்றிகளைக் கொடுத்து வரும் பாலகிருஷ்ணாவுடன் கொரட்டாலா சிவா இணைந்திருப்பது தெலுங்குத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரட்டாலா சிவா இயக்கத்தில் பாலகிருஷ்ணா - அதிகாரபூர்வ அறிவிப்பு
நாடு முழுவதும் மே மாதம் அதிக மழைப்பொழிவு இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in