

நாக் அஸ்வின்
‘கல்கி 2898’ படத்தின் இரண்டாவது பாகத்தில் புதிய கதாபாத்திரங்கள் எதுவும் சேர்க்கவில்லை என அதன் இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதனை உறுதி செய்துள்ள இயக்குநர் நாக் அஸ்வின், படப்பிடிப்பு பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘அனைத்து நடிகர்களுக்கான தேதிகளுக்காக காத்திருந்தோம். இப்போது அவை கிடைத்துவிட்டன. அக்டோபர் பிற்பகுதியில் இருந்து நாங்கள் வழக்கமான படப்பிடிப்பைத் தொடங்கி விடுவோம்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன் தொடர்பான தனிப்பட்ட காட்சிகளை எடுத்தோம். பிரபாஸின் தேதிகளுக்காக காத்திருந்தோம். இப்போது அதுவும் கிடைத்துவிட்டது. மொத்தப் படப்பிடிப்பையும் அடுத்த ஆண்டு மத்தியில் முடித்துவிடுவோம் என்று நம்புகிறோம். படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் வெளியீட்டு தேதி பற்றி பேச முடியும்.
இந்த பாகத்தில் புதிதாக எந்தக் கதாபாத்திரமும் சேர்க்கப்படவில்லை. முந்தைய பாகத்தில் தொடங்கிய கதையை அப்படியே தொடர்கிறோம். அதிலேயே ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தன’ என்று இயக்குநர் நாக் அஸ்வின் தெரிவித்திருந்தார்.
முதல் பாகமான கல்கி ‘2898’ படம் தீபிகா படுகோனே கதாபாத்திரைத்தை மையப்படுத்தியே இருந்தது. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளரான வைஜயந்தி மூவிஸ், இரண்டாவது பாகத்தில் தீபிகா படுகோனே தொடர மாட்டார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.