

மோகன்லாலின் மகன் பிரணவ் மலையாளப் படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் மகள் விஸ்மயா, ‘துடக்கம்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள இதில் டொவினோ தாமஸ், சாய் குமார், மியா ஜார்ஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். குடும்பப் பின்னணியுடன் கூடிய சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படம் நேற்று வெளியானது. இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது மகள் பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறும்போது, “விஸ்மயா இந்தப் பயணத்துக்காகத் தன்னை நன்றாகத் தயார்படுத்தியிருக்கிறார். அவர் ஓவியம், நடனம், தற்காப்புக் கலை உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி பெற்றிருப்பதால், அவருக்கு வலுவான அடித்தளம் இருக்கிறது.
ஆனால் நடிப்பு, முழுமையான அர்ப்பணிப்பை கோரும் தொழில். சரியான மனநிலையுடன் அணுகினால், அது அழகான தொழிலாக இருக்கும். நடிகரின் மகள் என்பதால் இயல்பாகவே அதிக கவனமும் விமர்சனங்களும் இருக்கும். அதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தப் பொறுப்பையும், அழுத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் விஸ்மயாவிடம் இருக்கிறது.
ரசிகர்கள் அவரை அவரது சொந்த திறமையின் அடிப்படையில் மதிப்பீடு செய்வார்கள் என்று நம்புகிறேன். அவர் நடிகையானதால் ஒரு தந்தையாக எனக்குப்பெருமை. ஆனால், ஒரு நடிகராக அவர் தனது அடையாளத்தை உருவாக்க வேண்டும். அதற்கான பயணத்தை அவர் இப்போது தொடங்கி இருக்கிறார்” என்றார்.