

மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் தமிழில், கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர், அப்பத்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்தியிலும் பல படங்களை இயக்கியுள்ள இவர் இப்போது, அக் ஷய் குமார் நடிப்பில் ‘பூத் பங்களா’ எனும் காமெடி படத்தை இயக்கி இருக்கிறார்.
இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அக் ஷய்குமார், சைஃப் அலிகான் நடிப்பில் ‘ஹைவான்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இது அவருக்கு 97-வது படம். அவரது 98- வது படத்தில் பங்கஜ் திரிபாதி, அன்னு கபூர், சவுரப் சுக்லா நடிக்க இருக்கின்றனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது முதல் படத்தில் நடித்த மோகன்லால் தன்னுடைய 100 -வது படத்திலும் கதாநாயகனாக நடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ” முதல் பட கதாநாயகனே 100-வது படத்திலும் நாயகனாக நடிப்பது உலக வரலாற்றில் ஒருபோதும் நடந்ததில்லை. கடவுள் உதவினால் அது நடக்கும் என்று நம்புகிறேன். நாங்கள் மீண்டும் இணையும் படம் நகைச்சுவைப் படமாக இருக்காது. இசையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
அப்படம் பற்றி இப்போது அறிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கின்றன. அதனால் இப்படத்துக்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.