

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில் டிச.8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 6 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. 8-வது குற்றவாளியான நடிகர் திலீப் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகை, இத்தீர்ப்பு குறிப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “8 ஆண்டுகள், 9 மாதங்கள், 23 நாள்கள் கழித்து இந்த நீண்ட வலிமிகுந்த பயணத்தில் இறுதியாகச் சிறிய வெளிச்சத்தைக் காண்கிறேன். 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில் நன்றி. என்னுடைய வேதனையைப் பொய்யென்றும் இந்த வழக்கைக் கற்பனைக் கதையென்றும் சொன்னவர்களுக்கு இந்த தருணத்தைச் சமர்ப்பிக்கிறேன்.
இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என நம்புகிறேன். மேலும், முதல் குற்றவாளி என் தனிப்பட்ட ஓட்டுநர் என சிலர் கூறிக்கொண்டே இருக்கின்றனர். இது பொய். அவர் என் ஓட்டுநரும் இல்லை. என் பணியாளரும் இல்லை. எனக்கு அறிமுகமானவரும் அல்ல. 2016ல் நான் பணியாற்றிய ஒரு திரைப்படத்துக்கு ஓட்டுநராக நியமிக்கப்பட்டவர் அவர்.
அப்போது ஓரிரு முறை மட்டுமே அவரைப் பார்த்தேன். அதன் பின், அந்தக் குற்றம் நடந்த நாள்வரை சந்திக்கவே இல்லை. தயவுசெய்து தவறான கதைகளைப் பரப்ப வேண்டாம். இந்தத்தீர்ப்பு பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, ஏதோ சரியில்லை என்று உணரத் தொடங்கினேன். ஒரு குறிப்பிட்ட குற்றவாளியின் விஷயத்தில், வழக்கு கையாளப்பட்டதில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பும் கவனித்தது.
இந்த வழக்கில் மிக முக்கியமான ஆதாரமான மெமரி கார்டு, நீதிமன்றக் காவலில் இருந்தபோதே 3 முறை சட்டவிரோதமாக அணுகப்பட்டது கண்டறியப்பட்டது. நீதிமன்றச் சூழல் அரசுத் தரப்புக்கு விரோதமாகிவிட்டது என்று தெளிவாகக் கூறி, இரண்டு அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கிலிருந்து விலகினர்.
இடைப்பட்ட இந்தக் காலங்களில், நான் உயர் நீதிமன்றத்தையும் உச்சநீதிமன்றத்தையும் அணுகி இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதைக் கூறினேன். இந்த வழக்கை அதே நீதிபதியிடமிருந்து மாற்ற வேண்டும் என்கிற ஒவ்வொரு கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன. இந்த நாட்டில் சட்டத்துக்கு முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதில்லை.
இந்தப் பயணத்தில் என்னுடன் துணை நின்றவர்கள் அனைவருக்கும் நன்றி. பணத்தைப் பெற்றுக்கொண்டு, என் மேல் அவதூறுகளைப் பொழிந்து, கதை கட்டியவர்கள் மேலும் பணத்தை வாங்கிக்கொண்டு அதைத் தொடர்ந்து செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளார்.