

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கன்னட நடிகர் உமேஷ் (80) காலமானார். பி.ஆர்.பந்துலு இயக்கிய ‘மக்கள ராஜ்யா’ (1960) படத்தில் அறிமுகமான எம்.எஸ்.உமேஷ் தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்தார். சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதற்கும் சிகிச்சைப் பெற்று வந்தார். நேற்று காலமானார். அவரது மறைவுக்குக் கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மத்திய அமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.