

‘வாரணாசி’ படத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார் ‘அவதார்’ இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’. இந்தியாவில் டிசம்பர் 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை விளம்பரப்படுத்த இயக்குநர் ராஜமவுலி உடன் இணையவழியாக கலந்துரையாடிய வீடியோ பதிவொன்று வெளியாகி இருக்கிறது.
‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தைப் பார்த்தபோது, திரையரங்கில் ஒரு குழந்தையைப் போல குதூகலித்ததாக தெரிவித்தார் ராஜமவுலி.
ஹைதராபாத்தில் ‘அவதார்’ திரைப்படம் ஒரு வருடம் வரை ஓடியது குறித்தும் நினைவுகளை அவர் பகிர்ந்துக் கொண்டார். மேலும், பெரிய திரை அனுபவங்களுக்கு ‘அவதார்’ ஒரு மைல்கல் என்றும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜமவுலியிடம் ஜேம்ஸ் கேமரூன் பேசும்போது, “‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு அரங்கினை பார்வையிட விரும்புகிறேன். எப்போது புலிகள் உள்ளிட்டவற்றை வைத்து படப்பிடிப்பு நடத்துகிறீர்களோ அப்போது அழையுங்கள். உங்களுடன் பேசியதற்கு நன்றி.
உங்களுடைய படப்பிடிப்புக்கு வருகிறேன். என்னிடம் ஒரு கேமரா கொடுங்கள், உங்களுக்காக சில ஷாட்களை இரண்டாம் யூனிட் இயக்குநராக எடுத்துக் கொடுக்கிறேன்” என்று தெரிவித்தார். அதற்கு, விரைவில் ஹைதராபாத்தில் என்னுடைய படப்பிடிப்பு தளத்துக்கு உங்களை அழைக்கிறேன் என்று பதிலளித்தார் ராஜமவுலி.