

சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் ’மன சங்கர வரபிரசாத் காரு’. அனில் ரவிபுடி இயக்கியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.12-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ரஜினியின் ‘தளபதி’ படத்தில், இளையராஜா இசையில் வெளியாகி ஹிட்டான ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை பயன்படுத்தியுள்ளனர்.
இது இப்படத்தில் சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் காட்சிக்கு பொருத்தமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்ற னர். இதுபோன்று பயன்படுத்தினால் காப்புரிமை வழக்குப் போடும் இசை அமைப்பாளர் இளையராஜா, இப்படத்துக்கு எப்படி அனுமதி அளித்தார் என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி, இயக்குநர் அனில் ரவிபுடியிடம் கேட்டபோது, “ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு வழிமுறை இருக்கிறது. இளையராஜா பெரிய இசை ஜாம்பவான். அவர் பாடலை பயன்படுத்தும் போது அவரிடம் முறையாக அனுமதி பெற்று பயன்படுத்துவது தான் சரி. நானும் தயாரிப்பாளரும் அவரைச் சந்தித்து இந்தப் பாடலை பயன்படுத்திக் கொள்வது பற்றி பேசினோம், அனுமதி அளித்தார்” என்றார்.