

மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்
‘த்ரிஷ்யம் 3’ படத்தின் கதைக்களம் எப்படியிருக்கும் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘த்ரிஷ்யம் 3’. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் பணிகளும் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ‘த்ரிஷ்யம் 3’ படம் குறித்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப். அப்பேட்டியில், “’த்ரிஷ்யம் 3’ கதையினை வேண்டுமென்றே எழுத முயற்சிக்கவில்லை. ‘த்ரிஷ்யம் 2’ படத்தில் ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையில் அடுத்த 7 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதில் மட்டுமே எனது கவனம் இருந்தது.
ஏனென்றால் அவர்களது சுற்றுப்புறங்களும், மக்களும் மாறிவிட்டனர். முதல் பாகத்தில் ஜார்ஜ்குட்டியை சுற்றியிருப்பவர்கள் அப்பாவி என்று நம்பினார்கள். ஆனால் அவர்களே இரண்டாம் பாகத்தில் ‘வேறு ஏதோ இருக்கிறது’ என்று நினைப்பது மாதிரி திரைக்கதை அமைத்திருப்பேன். 3-ம் பாகத்திலும் இதே போன்று வேறொரு அணுகுமுறையை வைத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ஜீத்து ஜோசப்.