

ஜேம்ஸ் கேமரூன் இயக்கி கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றத் திரைப்படம், ‘அவதார்’. இதன் அடுத்த பாகமான ‘அவதார் 2’, 2022-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் வசூலை வாரிக் குவித்தது. இப்போது, இதன் 3-ம் பாகம், ‘அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது.
நாளை (டிச.19) வெளியாக உள்ள நிலையில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இயக்குநர் ராஜமவுலியுடன் உரையாடினார். வீடியோவில் தோன்றிய ஜேம்ஸ் கேமரூனிடம், “அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தைப் பார்த்துவிட்டேன். பார்க்கும்போது சிறு குழந்தையைப் போல உணர்ந்தேன். தியேட்டரை விட்டு வெளியேறிய பிறகும், படத்தைப் பற்றிய எண்ணங்கள் என்னுள் ஓடிக்கொண்டே இருந்தன. ஹீரோ ஜேக் எடுத்த முடிவுகளும் அவர் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கும் காட்சிகளும் அற்புதமாகப்படமாக்கப்பட்டுள்ளன.
படத்தைப் பற்றி இன்னும் சொன்னால் அது ‘ஸ்பாய்ல’ராக ஆகிவிடும்” என்றார் ராஜமவுலி. பின்னர் ‘வாரணாசி’ படம் பற்றிக் கேட்ட கேமரூனிடம், “கிட்டத்தட்ட ஒரு வருடமாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் ஏழு முதல் எட்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்றார்.
இதையடுத்து “உங்கள் வாரணாசி செட்டுக்கு வரலாமா?” என்று கேட்ட ஜேம்ஸ் கேமரூன், மேலும் அப்படத்தின் இரண்டாம் யூனிட் காட்சிகளைப் படமாக்க விரும்புவதாகவும் கூறினார்.
“நீங்கள் வாரணாசி செட்டுக்கு வந்தால் நாங்கள் மிகவும் மகிழ்வோம். எங்கள் யூனிட் மட்டுமல்ல, மொத்த திரைப்படத்துறையும் மகிழ்ச்சியடையும்” என்றார். இரண்டு பிரம்மாண்ட இயக்குநர்கள் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.