

‘தேவாரா 2’ படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது. இதனால் கொரட்டலா சிவாவின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான படம் ‘தேவாரா’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், அப்படத்தின் கதை முடியாத காரணத்தினால் 2-ம் பாகம் உருவாக இருந்தது. ஆனால், படமோ எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
சமீபத்தில் ‘தேவாரா’ வெளியாகி ஓர் ஆண்டு ஆனதை முன்னிட்டு படக்குழுவினர் 2-ம் பாகத்தினை உறுதிப்படுத்தினார்கள். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அப்படத்தினை வாங்கிய விநியோகஸ்தர்கள் அனைவருக்குமே நஷ்டத்தினை ஏற்படுத்தி இருப்பதால், அதன் 2-ம் பாகத்துக்கு யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவாவின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. ஏனென்றால் முன்னணி நாயகர்கள் அனைவருமே பல்வேறு படங்களில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆகையால், யாருமே உடனடியாக தேதிகள் கொடுக்க முடியாத சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் கொரட்டலா சிவா தற்போது தனது திரையுலக வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
’தேவாரா’ படத்துக்கு முன்பாக, ‘ஆச்சார்யா’ படத்தினை இயக்கியிருந்தார் கொரட்டலா சிவா. சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இணைந்து நடித்த அப்படமும் படுதோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.