தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் அனந்த் நாக்!

தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் அனந்த் நாக்!
Updated on
1 min read

கன்னட திரையுலகின் மகத்தான நடிகராகத் திகழும் அனந்த் நாக், 2024-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருதைப் பெறுகிறார். இந்திய சினிமாவுக்கு அளித்த பங்களிப்புக்காக, திரையுலகின் மிக உயரிய கவுரத்தை அளிக்கிறது மத்திய அரசு.

இது குறித்து இன்று (செப்.16) மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய சினிமாவுக்கு அனந்த் நாக் அளித்த பங்களிப்பு மற்றும் பல தலைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலான அவரது திரைப் பயணத்தைக் கருத்தில் கொண்டு தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி, அனந்த் நாக்-க்குக்கு பெருமைக்குரிய தாதா சாகேப் பால்கே விருது 2024 வழக்குவதில் இந்திய அரசு மகிழ்ச்சி கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது வரும் 22-ம் தேதி குஜராத்தின் கேவாடியாவில் வைத்து நடைபெற இருக்கும் 72-வது தேசிய திரைப்பட விழாவில் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

அனந்த் நாகர்கட்டே என்ற அனந்த் நாக் 1948-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி பிறந்தார். கன்னட திரையுலகில் மிகவும் மதிப்புக்குரிய மூத்த நடிகரான அனந்த் நாக், 250-க்கும் அதிகமான கன்னடப் படங்கள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். கன்னடம் தவிர இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் தனது நடிப்பால் அனந்த் நாக் முத்திரை பதித்துள்ளார். புகழ்பெற்ற எழுத்தாளரான ஆர்.கே.நாராயண் கதைகளை அடிப்படையாகக் கொண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மால்குடி டேஸ்’ தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

தனது திரை வாழ்க்கையில் 5 முறை கர்நாடக மாநில அரசு விருது பெற்றுள்ள அனந்த் நாக்-குக்கு மத்திய அரசு 2025-ம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கவுரவித்தது.

தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில், ‘கேஜிஎஃப்’ படம் மூலம் இவர் வெகுவாக அறியப்பட்டது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, பிரதமர் மோடி, தாதாசாகேப் பால்கே விருது பெற இருக்கும் அனந்த் நாக்-குக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  தனது எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், ‘தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் புகழ்பெற்ற நடிகர் அனந்த் நாக்-குக்கு வாழ்த்துகள்.

பல தசாப்தங்களாக அவரின் இயல்பான நடிப்பு, பன்முகத்தன்மை, அபாரத் திறமை இந்திய திரையுலகில், குறிப்பாக கன்னட திரையுலகில் முத்திரை பதித்துள்ளன. தான் ஏற்று நடித்த அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தனித்துவமான ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் தன் நடிப்பால் கொடுத்துள்ளார். ஆகச் சிறந்த கலைஞரான அவருக்கு இது மிகச் சிறந்த கவுரவமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருது பெறுகிறார் கன்னட நடிகர் அனந்த் நாக்!
ஜோதிகா பகிர்ந்த திருமண நாள் கொண்டாட்டம் - ‘ஸ்பெஷல் நாளின் சில தருணங்கள்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in