

சிரஞ்சீவி நடித்துள்ள தெலுங்கு படம், ‘மன சங்கர வர பிரசாத் காரு’. இதில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவுபுடி இயக்கியுள்ளார். ஜன.12ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
வெளியான ஒரு வாரத்தில் இப்படம் ரூ.292+ கோடிகளை வசூலித்துள்ளது. சிரஞ்சீவி நடித்து இதற்கு முன் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் இப்படத்தின் வெற்றி அவருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி குறித்து நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பிரம்மாண்டமான வெற்றியை பார்க்கும் போது என் இதயம் நன்றியுணர்வால் நிரம்புகிறது. நான் எப்போதும் உங்கள் அன்பின் விளை பொருள் என்று கூறி வருகிறேன். இன்று நீங்கள் அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள்.
இந்த சாதனை தெலுங்கு ரசிகர்களுக்கும், அன்பான விநியோகஸ்தர்களுக்கும், பல தசாப்தங்களாக எனக்கு துணையாக நிற்கும் எனது அன்பான ரசிகர்களுக்கும் சொந்தமானது. திரையரங்குகளில் நீங்கள் எழுப்பும் ஆரவாரமே என்னை முன்னோக்கி செல்ல வைக்கும் ஆற்றல். சாதனைகள் வரும், போகும். ஆனால் நீங்கள் என் மீது பொழியும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.
இந்த பிளாக் பஸ்டர் வெற்றி நமது இயக்குநர் அனில் ரவிபுடி, தயாரிப்பாளர்களான சாஹூ மற்றும் சுஷ்மிதா உள்ளிட்ட ஒட்டுமொத்த படக் குழுவினரின் கடின உழைப்பிற்கும், என் மீது நீங்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் ஒரு காணிக்கையாகும். இந்த கொண்டாட்டத்தை தொடர்வோம்” என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.